» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை: அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
சனி 25, அக்டோபர் 2025 8:34:53 AM (IST)
குமரி மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை பெய்தது. பாலமோர் பகுதியில் 8¾ செ.மீ. அளவுக்கு மழை பதிவானது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதற்கிடையே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்திலும் கனமழையாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகல் நேரத்தில் விட்டு, விட்டு மழை பெய்தது.
ஆனால் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று காலை வரை விடிய, விடிய பலத்த சூறைக்காற்றுடன் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் நேற்று காலையில் பள்ளி- கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியும், மழைக்கோட் அணிந்தவாறும், குடைகளை பிடித்தவாறும் சென்றனர். காலை 7.30 மணிக்குப்பிறகு மழை சற்று ஓய்ந்தது. பின்னர் சாரல் மழையாக பெய்து கொண்டிருந்தது. மதியம் திடீரென மழை கொட்டியது. பின்னர் இரவு வரை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது.
குமரி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆறுகள், வாய்க்கால்களிலும் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான குடியிருப்பு பகுதிகள் மற்றும் வயல்கள், தோப்புகள் போன்றவற்றில் மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது. நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
பேச்சிப்பாறை அணை- 72.4, பெருஞ்சாணி அணை- 69.4, புத்தன்அணை- 68.6, சிற்றார்-1 அணை- 72.8, சிற்றார்-2 அணை-45.2, மாம்பழத்துறையாறு அணை- 38, முக்கடல் அணை- 24.2, கொட்டாரம்- 49.4, மயிலாடி-20.2, நாகர்கோவில்- 40.6, கன்னிமார்- 20.8, ஆரல்வாய்மொழி- 25, பாலமோர்-87.4, தக்கலை- 30, குளச்சல்- 21, இரணியல்- 18, அடையாமடை- 27.2, குருந்தன்கோடு- 38.6, கோழிப்போர்விளை- 44.2, ஆனைக்கிடங்கு- 37.6, களியல்- 40.2, குழித்துறை- 46.4, சுருளக்கோடு- 45.4, திற்பரப்பு- 58.4, முள்ளங்கினாவிளை- 37.8 என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 87.4 மி.மீ. அதாவது 8¾ செ.மீ. அளவுக்கு பதிவாகி உள்ளது.
இந்த மழையால் அணைகளுக்கு தண்ணீர் அதிகமாக வந்தது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,286 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 492 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 42.3 அடியாக இருந்தது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 1,597 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 66.81 அடியாக உள்ளது. சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 94 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 7.67 அடியாக உள்ளது.
சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 7.77 அடியாக உள்ளது. பொய்கை அணைக்கு வினாடிக்கு 7 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 21.7 அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 18 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 30.84 அடியாக உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 22.5 அடியாக உள்ளது.
திற்பரப்பு அருவியில் குளிக்க தடை
மலையோர பகுதியில் பெய்த கனமழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தோவாளை ஆற்றங்கரை பகுதியில் உள்ள சண்முகாநகர் பகுதியில் குடியிருப்பு மற்றும் விளை நிலங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது. அதாவது ஆற்றங்கரை பகுதியில் ஊராட்சி சார்பில் செயல்படும் இ.சேவை மைய கட்டிட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து தண்ணீர் செல்லும் கால்வாயை மூடி விட்டதால் மழைநீர் தேங்கி குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இதனால் குடியிருப்பு வாசிகள் அவதி அடைந்தனர். மழை நீரை விரைவில் வெளியேற்றி நோய் தொற்று ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தபகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது எதிரொலி: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய குமரி எஸ்பி!
சனி 25, அக்டோபர் 2025 8:50:44 PM (IST)

திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே கந்த சஷ்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்: தென்னக ரயில்வே அறிவிப்பு
சனி 25, அக்டோபர் 2025 7:33:03 PM (IST)

குமரி மாவட்டத்தில் பருவமழையினை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் : ஆட்சியர் அறிப்பு
சனி 25, அக்டோபர் 2025 5:16:41 PM (IST)

தூத்துக்குடியில் உலக நன்மைக்காக சிறப்பு துவா : திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
சனி 25, அக்டோபர் 2025 4:56:22 PM (IST)

மின் வாரிய அலுவலகத்தில் திமுக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி : கோவில்பட்டியில் பரபரப்பு!
சனி 25, அக்டோபர் 2025 4:50:15 PM (IST)

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக மகள் காந்திமதியை நியமித்தார் ராமதாஸ்!
சனி 25, அக்டோபர் 2025 4:06:09 PM (IST)




