» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முக்காணி உயர்மட்ட பாலத்தில் சீரமைப்பு பணி தொடக்கம் : ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு

புதன் 5, நவம்பர் 2025 8:48:27 AM (IST)



முக்காணியில் மழைவெள்ளத்தில் சேதமடைந்த தாமிரபரணி ஆறு உயர்மட்டப் பாலத்தில் சீரமைப்பு பணிக்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மராமத்து நேற்று பணி தொடங்கியது. 

தூத்துக்குடி-திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் முக்காணியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சுமார் 71 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடந்து வந்தது. மழைவெள்ளக்காலத்தில் ஆற்றிலிருந்து சில அடி உயரம் கொண்ட இந்த பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து ெசல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.

இதை தொடர்ந்து இந்த பாலத்திற்கு அருகிலேயே ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்டப்பாலம் கட்டப்பட்டு, கடந்த 2019-ம் ஆண்டு போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. இந்த பாலத்தில் போக்குவரத்து சீராக நடந்து வந்தது. கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 

அப்போது தாமிரபரணியில் திறந்து விடப்பட்ட பல லட்சம் கனஅடி தண்ணீர் பழைய பாலத்தை மூழ்கடித்துடன், உயர்மட்ட பாலத்தையும் தொட்டு சென்றது. தொடர்ந்து பல நாட்கள் பாலத்தை தொட்டவாறு வெள்ளம் சென்ற நிலையில், 14 தூண்களை கொண்ட இந்த பாலத்தில் 6-வது மற்றும் 7-வது தூண்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தொய்வு ஏற்பட்டு, பழுதடைந்தது.

இதை தொடர்ந்து அந்த பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மீண்டும் பழைய பாலம் சீரமைக்கப்பட்டு, சேதமடைந்த தடுப்பு சுவருக்கு பதிலாக கம்பிகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து நடந்து வருகிறது. பழுதடைந்த புதிய பாலத்தில் சில வாகனங்கள் சென்று வந்தன. இந்த நிலையில், பழுதடைந்த இந்த பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். 

தொடர்ந்து இந்த பாலத்தில் வாகன போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை விதிக்க பொறியாளர்கள் பரிந்துரை செய்தனர். இதை தொடர்ந்து அந்த பாலத்தின் இருபுறத்திலும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, முற்றிலுமாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக அந்த பாலமும் முடங்கி கிடக்கிறது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த தூத்துக்குடி-திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் முடக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கி, போக்குவரத்துக்கு திறக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைதொடர்ந்து, இந்த பாலத்தில் சீரமைப்பு பணிக்காக ரூ.3 கோடி நிதியை சென்னை தேசிய நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் ஒதுக்கீடு செய்தார். 

இந்த நிதியில் உயர்மட்ட பாலத்தில் சீரமைப்பு பணிக்கு நேற்று காலையில் பூமிபூஜை நடந்தது. தொடர்ந்து பாலத்தில் சேதமடைந்த பகுதியை அகற்றிவிட்டு, புதிதாக கட்டுமான பணியை மேற்கொள்ள ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த மராமத்து பணியை விரைந்து முடித்து போக்குவரத்துக்கு பாலத்தை திறந்து விட வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory