» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எஸ்.ஐ.ஆர் என்பது ஜனநாயக படுகொலை : தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. பேட்டி

வெள்ளி 7, நவம்பர் 2025 4:15:30 PM (IST)



ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சிதான் எஸ்.ஐ.ஆர் என்று கனிமொழி எம்.பி. கருத்து தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைந்து வ.உ.சிதம்பரனார் துறைமுக சமூக கூட்டாண்மை பொறுப்பு நிதியின் (CSR) பங்களிப்பில் ரூ.2.38 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மது மற்றும் போதை மறுவாழ்வு மைய கட்டிடத்தினை  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்பி திறந்து வைத்தார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்.ஐ.ஆர்.) தேர்தலுக்கு முன்பே கொண்டு வந்து, இப்படி அவசர அவசரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என நினைத்திருந்தால், போதிய அவகாசம் கொடுத்து எஸ்.ஐ.ஆரை சரியாக அமல்படுத்தியிருக்க முடியும். 

ஆனால் பீகாரில் நாம் தெளிவாகக் பார்த்தோம். பலரின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நிலை மராட்டியம், அரியானா ஆகிய மாநிலங்களிலும் நடந்துள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், மக்களின் வாக்குரிமை எந்த அளவிற்கு பறிக்கப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார். நம்முடைய முதல்-அமைச்சர் அதற்கு முழு ஆதரவையும் தெரிவித்தார்.

ஜனநாயகத்தை கொலை செய்யும் ஒரு முயற்சிதான், இந்த எஸ்.ஐ.ஆர். அதுமட்டுமில்லாமல், தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி பல பிரச்சினைகளை உருவாக்கி, வாக்காளர்களின் உரிமைகளை பறிக்கக்கூடிய ஒரு சூழல் உருவாகி கொண்டிருக்கிறது. இதையெல்லாம் எதிர்த்துதான் திராவிட முன்னேற்றக் கழகமும், கூட்டணி கட்சிகளும் இணைந்து ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருக்கிறோம்.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அவர்களுக்கு எதிரான குற்றங்கள் எதுவாக இருந்தாலும், அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களை நாம் கண்டிப்பாகக் கண்டிக்க வேண்டும். இந்த சமூகம் முதலில் சில விஷயங்களில் பெண் மீது பழிசுமத்தும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கையை முதல்-அமைச்சர் எடுத்து இருக்கிறார். அவர்களுக்கு மிக விரைவில், அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்று முழு முயற்சியோடு முதல்-அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

'உடன்பிறப்பே வா’ சந்திப்பின்போது நானும் உடன் இருந்தேன். வெற்றி பெறவில்லை என்றால் யாருடைய பதவியும் பறிக்கப்படும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. வெற்றி பெற வேண்டும் என்ற அறிவுரையை ஒரு கட்சித் தலைவர் வழங்குவது என்பது நிச்சயமாக தேவையான ஒன்று. வெற்றி பெற வேண்டும், அதற்காக அனைவரும் ஒருமித்து பாடுபட வேண்டும் என்று முதல்-அமைச்சர் அனைவரிடமும் சொல்லி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  பி.கீதா ஜீவன்  முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மேயர் பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையர்  சி.ப்ரியங்கா, மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory