» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விருதுநகரில் ரூ.61.74 கோடியில் புதிய சாலை மேம்பாலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

செவ்வாய் 11, நவம்பர் 2025 3:52:15 PM (IST)



விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனார் பெயரில் புதிய சாலை மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

விருதுநகர் மாவட்டத்தில் 61 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலையங்களுக்கிடையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, அப்பாலத்திற்கு தியாகி சங்கரலிங்கனார் மேம்பாலம் என பெயர் சூட்டினார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி நகரமானது பட்டாசு மற்றும் அச்சு தொழிலுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. குட்டி ஜப்பான் என்றும் இந்நகரம் அழைக்கப்படுகிறது. சிவகாசி நகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள சாட்சியாபுரத்தில் அமைந்திருக்கும் ரெயில்வே கேட் ஒவ்வொரு முறையும் மூடப்படும்போது, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்ததோடு, பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களும், அவசரமாக மருத்துவமனை செல்லும் மக்களும் நீண்டநேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு, இம்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்றும், அவர்களது சிரமத்தை போக்குவதற்காகவும், சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே நிலையங்களுக்கு இடையே சாட்சியாபுரத்தில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்கள். 

அந்த உத்தரவிற்கிணங்க, ஸ்ரீவில்லிபுத்தூர் – சிவகாசி – விருதுநகர் – அருப்புக்கோட்டை – திருச்சுழி – நரிக்குடி – பார்த்திபனூர் சாலையில் ரெயில்வே கேட் எண். 427க்கு மாற்றாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி ரெயில் நிலையங்களுக்கிடையே சாட்சியாபுரத்தில் 61 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு, அதை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11-11-2025) திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்ட தியாகி சங்கரலிங்கனார் விடுதலை போராட்ட வீரரும், மதராசு மாநிலம் என்று அழைக்கப்பட்ட மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்காக, தனது வீட்டின் முன்பு 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தவரும் ஆவார். அன்னாரது தியாகத்தை போற்றும் வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று புதிதாக திறந்து வைத்த மேம்பாலத்திற்கு "தியாகி சங்கரலிங்கனார் மேம்பாலம்” எனவும் பெயர் சூட்டினார்.

இந்த மேம்பாலத்தினால் சிவகாசியை சுற்றியுள்ள சாட்சியாபுரம், ஆனையூர், தேவர்குளம், திருத்தங்கல் உள்ளிட்ட 30 கிராமங்களை சேர்ந்த சுமார் 5 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள். மேலும், இம்மாவட்ட மக்களின் முப்பது ஆண்டு கால கனவு தமிழ்நாடு முதல்-அமைச்சரால் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory