» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டில் மாபெரும் புரட்சி உருவாகி 2026ல் விஜய் வெற்றிபெறுவார் : செங்கோட்டையன் பேட்டி!

வியாழன் 27, நவம்பர் 2025 4:13:15 PM (IST)



தமிழ்நாட்டில் 2026ல் மக்களால் மாபெரும் புரட்சி உருவாகி விஜய் வெற்றியை எட்டுவார் என்று தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன், தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை நேற்று(புதன்கிழமை) ராஜிநாமா செய்தாா். இதனைத் தொடர்ந்து, சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வீட்டுக்கு நேற்று மாலை நேரில் சென்ற செங்கோட்டையன், விஜய்யை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து சென்னை பனையூரில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன். திருப்பூர் முன்னாள் எம்பி சத்யபாமா உள்பட செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்தனர்.

தொடர்ந்து தவெக நிர்வாகிகள் மற்றும் செங்கோட்டையன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் செங்கோட்டையனை வரவேற்றுப் பேசினர்.

இதன்பின்னர் பேசிய செங்கோட்டையன், "அதிமுகவில் எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்டவன் நான். 1972ல் அதிமுக எனும் இயக்கம் தொடங்கியபோது இருந்தவன் நான். பொதுக்குழு முதலில் கூடியபோது அந்த பணிகளை சிறப்பாக முடித்தேன். அதற்கு எம்ஜிஆர் என்னை மிகவும் பாராட்டினார். அதிமுக 100 நாள்கள்கூட இருக்காது என்று எதிர்க்கட்சியினர் சொன்னார்கள். ஆனால் அதிமுக மாபெரும் இயக்கமாக உருவானது.

அண்ணாவால் பாராட்டு பெற்றவர் எம்ஜிஆர். 3 முறை முதலமைச்சராக இருந்தார். நிரந்தர முதல்வர் என்ற பெயரைப் பெற்றவர். அதன்பின்னர் 1987ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் பயணத்தை மேற்கொண்டேன். அவரது சுற்றுப் பயணம், ஆலோசனைகளில் பங்கேற்றிருக்கிறேன். அவரது பாராட்டையும் பெற்றிருக்கிறேன். அது உங்களுக்குத் தெரியும்.

ஆனால் இன்று இருக்கும் நிலைமைகள் வேறு. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நாங்கள் ஆட்சி நடத்தினோம். இப்போது அதிமுக 3 கூறுகளாகப் பிரிந்துள்ளது. அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்றுதான் வலியுறுத்தினோம். அது பரிமாறப்பட்டதே தவிர செயல்படுத்தப்படவில்லை.

நான் என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் தான் என்று பார்த்துக்கொள்வார். இறைவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அனைவரும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றுதான் தேவர் ஜெயந்திக்குச் சென்றேன். இரு நாள்களில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன்.

50 ஆண்டுகளாக இயக்கத்திற்காக ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்த எனக்கு கிடைத்த பரிசுதான் அது. நான் மட்டுமன்றி என்னைச் சார்ந்தவர்களையும் நீக்கினார்கள். பின்பு தெளிவான முடிவுகளை எடுத்தபிறகுதான் நேற்று ராஜிநாமா செய்தபிறகு இன்று தவெகவில் இணைத்திருக்கிறேன்.

திமுக, அதிமுக வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். 3 ஆவதாக ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். விஜய் மாபெரும் இயக்கத்தை உருவாக்க வெற்றி பயணத்தை தொடங்கியிருக்கிறார். தமிழக்தில் புதிய மாற்றம் வேண்டும். 'ஏன் இவர்கள் மட்டுமேதான் ஆள வேண்டுமா? புதிதாக ஒருவர் வேண்டும்' என மக்கள் நினைக்கிறார்கள்.

தில்லியில் ஆம் ஆத்மி, பஞ்சாபிலும் புதிய கட்சி ஆட்சி ஏற்பட்டது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். 2026 மக்களால் வரவேற்கப்படுகிற, மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிற, மக்களால் உருவாக்கப்படுகிற புனித ஆட்சி உருவாவதற்கு இளவல் விஜய் வெற்றி பெறுவார்.

தமிழ்நாட்டில் 2026ல் மக்களால் மாபெரும் புரட்சி உருவாகி அவர் வெற்றியை எட்டுவார்.திமுக, பாஜக என எந்த மாற்றுக்கட்சியில் இருந்தும் எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை, யாரும் என்னை அணுகவில்லை" என்று பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory