» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பசுமை தாமிர ஆலை: வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி!
செவ்வாய் 6, ஜனவரி 2026 12:08:48 PM (IST)
பசுமை தாமிர ஆலைத் திட்டம் தொடர்பாக வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
வேதாந்தா நிறுவனம் புதிதாக பசுமை தாமிர திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதற்கான அசல் செயல்முறையை மாற்றி தங்கள் கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இது தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடும் போது, ஒப்புதல் மீறல் மற்றும் பிற மீறல்கள் காரணமாக அந்தத் தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்தனர். மனுதாரர் மீண்டும் ஆலையை திறக்க விரும்பினால் தலைமைச் செயலாளர் மற்றும் பிற துறைச் செயலாளர்களுக்கு வெறும் மனுக்கள் அனுப்பக் கூடாது. உரிய அதிகாரிகளிடம் முறையான விண்ணப்பங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர், தலைமைச் செயலகம், மேலும் நான்கு பேரை பிரதிநிதித்துவப்படுத்தும் பாத்திமா என்பவருடைய மனு மற்றும் 2019 ஆம் ஆண்டின் ரிட் மனு ஆகியவை நீதிமன்றத்தில் பரிசீலனையில் உள்ளது. இந்த சூழலில் புதிதாக தாக்கல் செய்த மனுவை 2019 மனுவுடன் சேர்த்து ஜனவரி 29, 2026 அன்று விசாரணைக்கு பட்டியலிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு நிலுவையில் இருப்பது, மனுதாரர் உரிய அதிகாரிகளிடம் புதிய விண்ணப்பம் செய்வதற்கு தடையாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த மனு மீது முடிவெடுக்க அதிகாரிகளுக்கு முழு உரிமை உண்டு என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பி.ஆர்.கோவிலன் கூறுகையில், வேதாந்தா நிறுவனம் பசுமை தாமிர உற்பத்தி ஆலையை அமைப்பதற்கு முறையான விண்ணப்ப செயல்முறையை தொடங்க வழிவகுக்கிறது. வேதாந்தாவின் பசுமை தாமிர ஆலை நிறுவப்படும் போது, தொழில்துறை வளர்ச்சியும் சுற்றுச்சூழல் நிலைத் தன்மையும் இணைந்து பயணிக்க முடியும். இது தமிழகத்தின் எதிர்கால முன்னேற்றத்தில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று கூறினார்.
இந்த வழக்கில் வேதாந்தா நிறுவனத்தின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் பிரிவு மனுதாரராக இருக்கிறது. தமிழக அரசின் தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை ஆகியவை முதல் இரண்டு பிரதிவாதிகள். மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் சுரங்க அமைச்சகங்கள், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழகத்தின் சிப்காட் ஆகியவை மற்ற நான்கு எதிர் மனுதாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்புமணியுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது ஏற்புடையது அல்ல! - ராமதாஸ்
புதன் 7, ஜனவரி 2026 5:14:15 PM (IST)

நாகர்கோவில் சந்திப்பில் ரயில் சேவை மாற்றம் : குமரியில் இருந்து ரயில்கள் இயக்கம்!
புதன் 7, ஜனவரி 2026 4:37:07 PM (IST)

தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? டெல்லி ஆள வேண்டுமா? முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
புதன் 7, ஜனவரி 2026 3:28:18 PM (IST)

திருச்செந்தூர் தைப்பூச விழாவிற்கு சிறப்பு ரயில் இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
புதன் 7, ஜனவரி 2026 12:54:47 PM (IST)

தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் : வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 7, ஜனவரி 2026 11:19:57 AM (IST)

சான்றிதழ் வாங்கி வந்த இளைஞர்கள் பஸ் மோதி உயிரிழப்பு - குமரியில் சோகம்!
புதன் 7, ஜனவரி 2026 11:12:54 AM (IST)

