» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பட்டினமருதூர் பகுதியில் மத்திய விலங்கியல் துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள் ஆய்வு

செவ்வாய் 6, ஜனவரி 2026 5:16:07 PM (IST)



பட்டினமருதூர்–பனையூர் பகுதியில் கடல் சார் புதைபடிமங்கள் குறித்து மத்திய விலங்கியல் துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள தருவைகுளம் என்ற மீனவ கிராமத்தின் அருகருகே பட்டினமருதூர், பனையூர் எனும் பகுதி உள்ளது. இங்கு பழமை வாய்ந்த செவ்வக வடிவிலான கிணறு, முதுமக்கள் தாழி, பழமையான ஓடுகள், எழுத்துக்கள், பண்டைய இரும்புகள், பண்டைய கால நாணயங்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. ஏற்கனவே பட்டினம் மருதூர் பகுதி தொல்லியல் தளமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், பட்டினமருதூர் மற்றும் பனையூர் பகுதிகளில் நீர் மற்றும் நிலப்பரப்பு அடியில் புதையல்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் இருப்பதால் இதனை இந்திய விலங்கியல் மற்றும் புவியியல் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்த வேண்டும் என்று தூத்துக்குடியை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் என்பவர் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். 

அதன்படி மாவட்ட ஆட்சியரும், கொல்கத்தாவில் உள்ள இந்திய விலங்கியல் மற்றும் புவியியல் ஆய்வு மையங்களுக்கு கடிதம் அனுப்பிய நிலையில் பனையூர் பகுதியில் கடல் சார் புதை படிமங்கள் மற்றும் படிவ பாறைகள் குறித்த முதல் கட்ட கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய விலங்கியல் துறை அதிகாரிகள் தேபா ஸ்ரீ, சந்திரன், தோலா ராய் ஆகியோர் அடங்கிய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உடன், தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை தலைவர் சுதாகர், ஆகியோர் ஆய்வு செய்தனர். அதில், சிறிய, சிறிய சிப்பிகள் ஆகியவைகளை சேமித்துள்ளனர்.

இது குறித்து, மத்திய விலங்கியல் துறை அதிகாரிகள் தேபா ஸ்ரீ, தோலா ராய், சந்திரன் ஆகியோர் கூறும் போது, 2 கிலோமீட்டர் தூரம் ஆய்வு செய்தோம். 12,000 வருடத்திற்கு முன்பு கடலாக இருந்த இடம் இதுபோன்று அறியப்படுகிறது. கடல் சிப்பிகள், பலதரப்பட்ட முத்து சிப்பிகள் போன்றவைகளை ஆய்வு பணிக்காக எடுத்து இருக்கின்றோம். இது பாதுகாக்கப்பட வேண்டிய இடம். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இதனை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும். 

அடுத்த தலைமுறைக்கு இதனை கொண்டு போகலாம். கடலுக்கு நாலு கிலோ மீட்டர் தொலைவில் இவ்வாறு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. முழுமையாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். கடலிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் இவ்வாறு இருப்பது என்றால் கடல் உள்ளேயும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் வரலாற்று உண்மைகள் வெளியே வரும் என்றனர்.

இது குறித்து, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் தொல்லியல் துறை தலைவர் சுதாகர் கூறும் போது, பாறை வடிவங்கள் இதேபோன்று பட்டினம் பட்டினமருதூர் மணப்பாடு, பகுதியில் கிடைக்கின்றது. இந்த பகுதி பாதுகாக்கப்பட வேண்டும். அரசு அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்றார்.

ராஜேஷ் செல்வரதி கூறும்போது, ஆல் கடலில் இருப்பது போன்ற பொருட்கள் கிடைத்துள்ளது. இந்த சிப்பிகள் கடற் பகுதியில் இருந்து வெளியிடத்திற்கு நகராது. ஆனால் இங்கு முத்துச்சிப்பி கிடைத்துள்ளது. கடல் பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் தொல்லியல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளார். இதெல்லாம் கூடுதல் பலம். காணாமல் போன குமரிக்கண்டம் போன்றவைகளை கண்டுபிடிக்கலாம். பாண்டியர்களின் இருண்ட காலத்திற்கு விடை கிடைக்குமா என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory