» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேற இணைந்து பயணிப்போம்: மு.க.ஸ்டாலின் வரவேற்பு

வியாழன் 19, பிப்ரவரி 2026 12:00:03 PM (IST)



தேமுதிக கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு சென்றார். அங்கு வாசலில் அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர் பாபு, கோவி.செழியன் ஆகியோர் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரேமலதா சந்தித்து பூங்கொத்து கொடுத்து தி.மு.க. கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டார். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சந்திப்பின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், பூச்சி முருகன், தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான 'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!

சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்! திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்! என்று கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory