» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொகுதி மறுவரையறை மசோதா நகல் எரிப்பு : கருப்பு உடை அணிந்து முதல்வர் போராட்டம்!

வியாழன் 16, ஏப்ரல் 2026 11:03:22 AM (IST)



மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் மசோதாவின் நகலைத் தீயிட்டு எரித்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். அப்போது அவருடன் இருந்த திமுகவினர், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

நாடாளுமன்றச் சிறப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று மாநிலம் முழுவதும் திமுகவினர் இன்று கருப்புக்கொடி ஏந்தியும், வீடுகளின் முன் கருப்பு நிறக் கோலமிட்டும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று இரவு நாமக்கல் வந்த முதல்வர் ஸ்டாலின், இன்று காலை நல்லிபாளையம் பகுதியில் கருப்பு உடை அணிந்து வந்து போராட்டத்தில் பங்கேற்றார். அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடியை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து, மசோதாவின் நகலைத் தீயிட்டு எரித்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். அப்போது அவருடன் இருந்த திமுகவினர், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தை முடித்துக்கொண்டு நாமக்கல் உழவர் சந்தைக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளர் ராணிக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இப்போராட்டம் குறித்து முதல்வர் தனது 'எக்ஸ்' (X) தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத்தீ பரவட்டும், பாசிச பாஜகவின் ஆணவம் வீழட்டும். அன்று தமிழ்நாட்டில் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லி வரை எதிரொலித்தது. இன்று தமிழர்களைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன். இத்தீ திராவிட நாடெங்கும் பரவி பாஜகவின் ஆணவத்தை அடக்கும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory