» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தவெக ஆட்சியில் 151 பாலியல் குற்றங்கள், 85 படுகொலைகள்: ஆளுநரிடம் பாஜக புகார்!

சனி 4, ஜூலை 2026 11:49:13 AM (IST)

NainarGovernor.jpg

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றது முதல் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை நேரில் சந்தித்துப் புகார் மனு அளித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரைத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சனிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார். இச் சந்திப்பின் போது பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக நிர்வாகி திருப்பதி நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, குதிரை பேரம் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஆளுநரிடம் அவர்கள் விரிவான புகார் மனுவை அளித்தனர்.


இச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது: "உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், பெண் குழந்தைகளிடம் நடந்து கொண்ட விதம் குறித்தும், அமைச்சரவையில் இடம் பெறாத விஷ்ணு ரெட்டி, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் அதிகார வரம்பை மீறி அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டது பற்றியும் ஆளுநரிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளோம்.

புதிய தவெக அரசு பொறுப்பேற்ற இந்த 54 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 151 பாலியல் சம்பவங்கள், 85 படுகொலைகள் மற்றும் 80-க்கும் மேற்பட்ட போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பில் முந்தைய திமுக அரசுக்கும் தற்போதைய அரசுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. குற்றச் சம்பவங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காக்கிறார்.

வெள்ளை அறிக்கை கோரிக்கை:

தவெக கட்சியினரே பல்வேறு தவறுகளில் நேரடியாக ஈடுபடுகின்றனர், அதற்கான முழுப் பட்டியல் என்னிடம் உள்ளது. தமிழகத்தில் நடந்துள்ள குற்றங்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த அரசில் குதிரை பேரம் நடக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சட்டத்துறை அமைச்சருக்கே சட்டம் தெரியவில்லை" என்று அவர் கடுமையாகச் சாடினார்.

மதுரையில் வைகை ஆற்றில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் ஆய்வு மேற்கொண்டதற்குத் தவெக அரசும் அதன் அமைச்சர்களும் நேற்று பலத்த எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இன்று பாஜக தலைவர்கள் ஆளுநரைச் சந்தித்துப் புகார் அளித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory