» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜூலை 10-ல் கட்டாயம் ஆஜர்: நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு நீதிமன்றம் இறுதி உத்தரவு!

சனி 4, ஜூலை 2026 12:20:54 PM (IST)

சொத்துத் தகராறில் அண்ணன் குடும்பத்தைத் தாக்கிய வழக்கில், தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் வரும் ஜூலை 10-ஆம் தேதி நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று புதுச்சேரி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுத் தற்போது தமிழக நிதி அமைச்சராகப் பதவி வகித்து வருபவர் மரிய வில்சன். இவருக்கும் இவருடைய தந்தை நெஸ்டோர் என்பவருக்கும், புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அண்ணன் மரிய கிளோத் என்பவருடன் சொத்துத் பிரச்சனை இருந்து வந்துள்ளது. 

இதன் காரணமாகக் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி இரவு, மரிய வில்சன் மற்றும் நெஸ்டோர் ஆகியோர் மரிய கிளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு அண்ணன் மரிய கிளோத் மற்றும் அண்ணி கெரோலின் ஆகியோரை ஆபாசமாகத் திட்டி, உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனர். மேலும் கெரோலினை மானபங்கப்படுத்தி, பள்ளி நிர்வாகத்தில் தலையிட்டால் குடும்பத்தோடு கொலை செய்துவிடுவோம் என மிரட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர்.

இக் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த அண்ணன் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசார் அத்துமீறி நுழைதல், ஆபத்தான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்துதல், பெண்ணை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மரிய வில்சன் மற்றும் நெஸ்டோரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சேரலாதன் முன்னிலையில் நடந்து வருகிறது.

வழக்கு விசாரணைக்காகப் பலமுறை வாய்தா வழங்கப்பட்ட போதிலும், அமைச்சர் மரிய வில்சன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதனால் குற்றப்பத்திரிகையை நேரில் பெற்றுக்கொள்ள இன்று (ஜூலை 4, சனிக்கிழமை) கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி சேரலாதன் முந்தைய விசாரணையின் போது உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், இன்றும் அமைச்சர் மரிய வில்சன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக ஆஜரான வக்கீல் சிவக்குமார், "தமிழகத்தில் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் மரிய வில்சனால் நேரில் ஆஜராக முடியவில்லை" என விளக்கம் அளித்தார். இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி சேரலாதன், "இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால்தான் ஆஜராகக் கூறினேன், இப்போதும் ஆஜராகாவிட்டால் எப்படி?" எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து வரும் ஜூலை 6-ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்ட போது, அன்றைய தினமும் ஆஜராக முடியாது என வக்கீல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி சேரலாதன், வரும் ஜூலை 10-ஆம் தேதி (10.07.2026) நிதி அமைச்சர் மரிய வில்சன் நீதிமன்றத்தில் கட்டாயமாக நேரில் ஆஜராக வேண்டும் என இறுதி உத்தரவைப் பிறப்பித்தார். இம்முறை புகார்தாரர் தரப்பில் வக்கீல் பிரவீன் ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory