திருநெல்வேலியின் வரலாறு (3 of 14)
காட்டு வளம்
காடுகளின் பரப்பு 40,253,16 ஹெக்டேர்கள். இம்மாவட்டத்தின் காடுகள் அனைத்தும் மலைகளில்தான் காணப்படுகின்றன. மரங்களில் கோங்குதான் விலை மதிப்புடையது. இங்கு காடுகள் காணப்படும் வட்டங்கள்: நாங்குநேரி, அம்பா சமுத்திரம், தென்காசி வட்டங்கள். செங்கோட்டை வட்டத்துக் காடுகளில் இரயில் பாதை போடப்பயன்படும் 'ஸ்லீப்பர்' கட்டைகளுக்கு உதவும் மரங்கள் உள்ளன. அம்பாசமுத்திரம் காடுகளில், மயிலை, நெடுநாரி, மதகிரிவேம்பு, நங்குல், செங்குரஞ்சி மரங்களும், பிரம்பு வகை களும், ஈச்ச மரங்களும், தேக்கு, கோங்கு தோதகத்தி, நாங்கு மரங்களும் அடர்த்தியாக உள்ளன.
நாங்குநேரி வட்டத்தில் ஒடை மரங்களும், மகிழ மரவகைகளும், எட்டி, வெள்ளத்துவரை போன்ற மரவகைகளும் உண்டு. செங்கோட்டை காடுகளில் காகிதக் கூழ் செய்ய உதவும் ஈடா ரீட் மரங்கள் ஆண்டுதோறும் 10,000 டன் அளவுக்குப் பயிராக்கப்படுகின்றன. மரங்களைத் தவிர பிசின் மரம், மஞ்சக்கடம்பன், கரையானால் அரிக்க முடியாத விடத்தேரை ஆகிய மரங்களும் மிகுதியாக வளர்கின்றன.
காட்டு விலங்குகள்
செங்கோட்டை காடுகளில் யானை, காட்டெருமை இன்னும் பல வகையான விலங்குகள் காணப்படுகின்றன. சங்கரன் கோவில், அம்பா சமுத்திரம் நாங்குநேரி காடுகளில் காட் டெருதுகள் காணப்படுகின்றன. புலிகள் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் உள்ளன. சிறுத்தைக் குறைவு. தேனுண்ணும் கரடி வகை அதிகம். தலை சிறுத்த சாம்பர் மானும், குற்றாலம், திருக்குறுங்குடி பகுதிகளில் மலையாடுகளும் உள்ளன. எலிமான்கள் போன்ற இவை கண்களுக்குத் தெரிவதில்லை. மான் போன்ற தோற்றம் கொண்ட மறிமான்களும், காட்டு நரிகள், நீண்டவால் குரங்குகள் போன்றவையும் காணப்படுகின்றன.
பறவைகள்
மணிப்புறா, கிளி, பெரிய அலகு கொம்புப்பறவை ஆகியவை இம்மலைகளில் காணப் படுகின்றன. சனவரி-பிப்ரவரியில் சாம்பல் நிறமுடைய பெலிக்கன் பறவைகள் இலங்கையில் இருந்து வந்து நாங்குநேரி வட்டத்திலுள்ள விஜய நாராயணபுரம் குளத் திற்கு அருகில் தங்கி தாயகம் செல்கின்றன. பருத்தி வாத்து என்ற ஒருஇனம் இங்கு நிரந்தரமாக வாழ்கிறது. உள்ளான்களும், மரஉள்ளான்களும் தாழ்ந்த மலைக் குன்றுகளில் அதிகமாக வாழ்கின்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு விதமாகப் பூச்சிகள் வாழ்கின்றன.
நிலவளம்
திருநெல்வேலி மாவட்டம் ஐவகை நிலங்களையும் ஒருங்கே கொண்டு திகழ்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் குறிஞ்சி நிலமாகவும், முல்லை நிலமாகவும் உள்ளன. மருதநில வளத்தைத் தாமிரபரணி பாயும் ஆற்றுப் பகுதிகளில் காணலாம். புன்செய் பயிர்கள் சங்கரன் கோவில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வட்டங்களில் விளைகின்றன. இவை கரிசல் காடுகள். மணற்பகுதிகளாக உள்ள பாலைப் பகுதிகளை 'தேரிக் காடுகள்' என்று அழைக்கின்றனர். நாங்குநேரி வட்டத்தின் தென் பகுதிகளில் இவற்றைக் காணலாம். இங்கு சில மணற் குன்றுகள் 200 அடிக்கும் மேல் உள்ளன.
தருவைகள்
பாலைவன ஊற்றுகளை போல இம்மணற் குன்றுகளில் தேங்கும் நீர் நிலத்தடி நீரோடு சேர்ந்து சிற்றேரிகளாக காட்சி தருகின்றன. இவற்றை இப்பகுதி மக்கள் 'தருவை'கள் என்று அழைக்கின்றனர்.