திருநெல்வேலியின் வரலாறு (5 of 14)

சுற்றுலா தலங்கள்
 
குற்றாலம், பாபநாசம் நீர்வீழ்ச்சி, மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி,   கிருஷ்ணாபுரம், திருக்குறுங்குடி, முண்டந்துறை புலிகள் சரணாலயம், களக்காடு புலிகள் சரணாலயம், கூந்தக் குளம் பறவைகள் சரணாலயம், அரியகுளம் பறவைகள் சரணாலயம் ஆகியவை நெல்லை மாவட்டத்தின் குறிப்பிடத்தகுந்த சுற்றுலாத் தலங்களாகும். .
 
பாபநாசம் நீர்வீழ்ச்சி
 
அம்பாசமுத்திரம் இரயில் நிலையத்திலிருந்து 8கி.மீ. தொலைவில் உள்ளது. அகத்திய மலையில் தோன்றும் சிற்றாறு மேலணையிலிருந்து 40 அடி தொலைவில் விழுகிறது.
 
மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி
 
குற்றாலத்திலிருந்து 48கி.மீ தொலைவில் உள்ளது. மலைமீது அருவி இருக்கிறது. இங்கு குளிக்கும் வசதியுள்ளது. ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வீழ்கிறது. அருவியின் உயரம் 25 அடி. குளிக்கும் இடத்தில் அருவியின் உயரம் 17அடி. அருவிக்குக் கீழே 80 அடி ஆழத்துக்கு நீச்சல் குளத்தைப் போன்ற அமைப்புள்ளது. இங்கு மணிமுத்தாறு அணையையும் காணலாம். பெரிய மணிமுத்தாறு அணையில் பூங்கா, சிலைகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, செயற்கைக்குகை, கோழிப்பண்னை, மீன்பண்ணை, விதைப்பண்ணை முதலியவை உள்ளன. மலைமீது மாஞ்சோலைத் தோட்டங்களைக் காணலாம்.
 
குற்றாலம்
 
திருக்குற்றாலம்
 
தென்காசியிலிருந்து 3கி.மீ தொலைவில் உள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்கள் அருவியைப் பார்ப்பதற்கு ஏற்ற காலமாகும்.  குற்றாலத்தில் அருவியாக விழும் ஆற்றின் பெயர் சிற்றாறு ஆகும். இந்த ஆறு திரிகூட மலையில் தோன்றி, வரும் வழியில் முதலில் நூறு அடி உயரத்திலிருந்து விழுகிறது.
 
தேன் அருவி
 
தேன் அடைகள் மிகுந்து காணப்படுவதால் இப்பெயர் உண்டாயிற்று.
 
செண்பகாதேவி அருவி
 
தேனருவி ஒன்றரைக்கல் வரையிலும் மலையில் சிற்றாறாக ஓடி, பிறகு செண்பக மரங்கள் நிறைந்த காட்டு வழியே பாய்ந்து, முப்பது அடி உயரமுள்ள அருவியாக விழுகிறது. இதனால் செண்பக அருவி என்று பெயர் பெற்றுள்ளது.
 
பொங்குமாகடல்
 
செண்பகாதேவி அருவியிலிருந்து 2 கல்தூரம் பாய்ந்து, இருநூற்று எண்பது அடி உயரமுள்ள அருவியாகக் குதிக்கிறது. இந்த இடத்தில் ஒரே வீழ்ச்சியாக இல்லாமல் பாறை மேல் விழுந்து பொங்கி விரிந்து கீழ்நோக்கி விழுகிறது. இப்படி பொங்கி எழுவதால் இதைப் பொங்குமாகடல் என்று கூறுகிறார்கள்.
 
புலி அருவி
 
குற்றாலத்துக்குக் கிழக்கே முக்கால் மைல் தொலைவில் புலி அருவி இருக்கிறது. புலிகள் வந்து நீர் அருந்துவதால் இப்பெயர் பெற்றது.
 
ஐந்தருவி
 
சிற்றாற்றின் ஒரு பிரிவு ஐந்து அருவிகளாக விழுகிறது. அதனால் இதனை ஐந்தருவி என அழைக்கின்றனர். ஆற்றுநீர், ஐந்து அருவிகளாக விழும் காட்சி கண்களுக்கு இனிமையாகும். செண்பக அருவிக்கு அருகில் செண்பக தேவி அம்மன் கோயில் இருக்கிறது. சாரல் காலத்தில் வெயில் மழை தூறுவதும் மாறி மாறி நடக்கும். நீர்த்திவலைகள் துள்ளித் தெறிப்பது சிறு மழைபோல் தோன்றும். பெரிய அருவியில் சாரல் காலத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். குற்றாலநாதர் கோயிலுக்குத் தென்புறம் குறும்பலா இருக்கின்றது.
 
ஐந்தருவிக்குப் போகும் வழியில் கூத்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சித்திர சபை என்னும் சிறிய கோவில் ஒன்றும் உள்ளது. அருவி விழுகின்ற ஒலி நெடுந் தொலைவு வரை கேட்கும். உடலில் எண்ணெய்த் தேய்த்துக் கொண்டு நின்றால் சீயக்காய் தேய்க்காமலே எண்ணெய் போய் விடும். குற்றாலத்தில்-இரவிலும் பகலிலும் அருவியைப் பார்ப்பது அழகுதான்.


Favorite tags



Tirunelveli Business Directory