» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
திரைப்பட தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை!
செவ்வாய் 21, ஜனவரி 2025 11:23:30 AM (IST)
ஐதராபாத்தில் 'கேம் சேஞ்சர்' படத் தயாரிப்பாளர் தில் ராஜூ, புஷ்பா-2 படத் தயாரிப்பாளர் மைத்ரி நவீனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
விஜய் நடித்த 'வாரிசு' மற்றும் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த 'கேம் சேஞ்சர்' உள்ளிட்ட படங்களை தயாரித்த தில் ராஜூவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். தில் ராஜூ தயாரிப்பில் கேம் சேஞ்சர், சங்கராந்திக்கு ஒஸ்தானு படங்கள் இந்த மாதம் ரிலீஸ் ஆகின.
இந்த சூழலில் ஐதராபாத்தில் உள்ள தில் ராஜூவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தில் ராஜூ நடத்தி வருகிறார். இவர் அண்மையில் மாநில அரசின் தெலுங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இதேபோல் அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' மற்றும் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா-2' ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பு நிறுவன நிர்வாகிகளின் இல்லங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி தயாரிப்பாளரான மைத்ரி நவீனுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி செர்ரி ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது
இதன்படி பஞ்சாரா ஹில்ஸ் மற்றும் ஜூப்ளி ஹில்ஸ் பகுதிகளில் அதிகாலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.