» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தலைக்கு ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட் உட்பட 14 பேர் சுட்டுக்கொலை!
செவ்வாய் 21, ஜனவரி 2025 3:41:35 PM (IST)
சத்தீஷ்காரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நக்சலைட்டுகளை கட்டுப்படுத்த மாநில போலீசாருடன் இணைந்து மத்திய பாதுகாப்புப்படையினரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சத்தீஷ்காரின் ஹரியபெண்ட் மாவட்டத்தில் ஒடிசா எல்லையையொட்டிய வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் நேற்று இரவு முதல் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் திடீர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
இன்று அதிகாலை வரை துப்பாக்கி சண்டை நீடித்தது. இந்த என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட நக்சலைட்டுகளில் தலைக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட்டும் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த என்கவுன்டரின் போது பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.