» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
2025-26ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்!
சனி 1, பிப்ரவரி 2025 11:29:07 AM (IST)
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2025-26 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து நாடாளுமன்றத்தில் உரையாற்றி வருகிறார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று கூடியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத்தலைவர் உரையுடன் பட்ஜெட் கூடியது. அதன்பிறகு இரு அவைகளிலும் 2024-25ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதில், கச்சா எண்ணெய் விலை குறையும். ஆனால், இயற்கை எரிவாயு விலை அதிகரிக்கும். மதிப்பு வாய்ந்த உலோகங்களை பொறுத்தவரை, தங்கம் விலை குறையும். ஆனால், வெள்ளி விலை அதிகரிக்கும். இரும்புத்தாது, துத்தநாகம் ஆகியவற்றின் விலை சரிவதால், கனிமங்களின் விலையும் குறையும். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும்.
நாட்டில் வேலைவாய்ப்பின்மை என்பது குறைந்துள்ளது என்பன போன்ற தகவல்கள் இடம் பெற்று இருந்தன. இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (பிப்ரவரி 1) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 8-வது பட்ஜெட் இதுவாகும். இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் மாத சம்பளம் பெறும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், வருமான வரிச்சலுகை, தொழில்துறையினருக்கு வரிக்குறைப்பு போன்ற அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இதில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. இந்த நிலையில் தான், இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில், வருமான வரி உச்ச வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய் ஈட்டுவோர் 25 % வரி செலுத்தும் வகையில் புதிய வரிப் பிரிவு சேர்க்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் வரி செலுத்துவோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பழைய வரி முறையை நிரந்தரமாக நீக்கி விட்டு, புதிய வரி முறையை அமல்படுத்தவும் மத்திய அரசு ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.
இதனால் இது பற்றிய அறிவிப்பும் பட்ஜெட்டில் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இத்தகைய பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் தொடங்கியதும் லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி செய்தனர். நிர்மலா சீதாராமனை வாசிக்க விடாமல் அமளி செய்தனர். அமளிக்கு மத்தியில் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.
முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து நிதி அமைச்சகத்தில் இருந்து வந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னதாக நாட்டின் நலனுக்கு ஏற்ப பட்ஜெட் இருக்கும் என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.