» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நடுத்தர மக்களின் மீது கவனம்: மத்திய பட்ஜெட் சிறப்பானது: பிரதமர் மோடி பாராட்டு
சனி 1, பிப்ரவரி 2025 4:00:39 PM (IST)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே மக்களவையில் இன்று காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுபோல் வருமான வரி உச்ச வரம்பில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன். இது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
புதிய வருமான வரி விதிப்பு முறையின்படி வருமான வரிக்கான உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமான வரி தாக்கல் செய்யும்போது கூடுதலாக ரூ.75,000 கழிவும் கிடைக்கும். இது தவிர பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் சிறப்பானது. நடுத்தர மக்களின் மீது கவனம் செலுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வருமான வரி குறைக்கப்பட்டுள்ளதால் நடுத்தர மக்களுக்கு பலன் கிடைக்கும். கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் கடன் கிடைக்கும். சுற்றுலா உள்ளிட்ட துறைகளுக்கு வளர்ச்சி அளிக்கும் பட்ஜெட் சிறப்பானது" இவ்வாறு கூறியுள்ளார்.