» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

புதன் 22, ஏப்ரல் 2026 10:54:33 AM (IST)

ஈரானுக்கு எதிரான அமைதிப்பேச்சுக்கு அவகாசம் அளிக்கும் வகையில், தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் தனது சொந்த வலைதளப் பக்கமான ட்ரூத்சோஷியல் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "ஈரானிய அரசு கடுமையான பாதிப்பைச் சந்தித்திருப்பதாக தோன்றும் உண்மையின் அடிப்படையிலும், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில், ஈரானிய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்த ஒப்பந்தத்தை முன்வைக்கும் வரை ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்திவைக்க எங்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அமெரிக்க ராணுவம் முற்றுகையைத் தொடரவும், எல்லா வகையில் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிட்டுள்ளேன். அவர்களுடைய ஒப்பந்தம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிவுக்கு வரும் வரை போர்நிறுத்தம் நீட்டிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அணுசக்திக் கொள்கைகளைக் கைவிட வேண்டும், யுரேனியம் பயன்படுத்தக் கூடாது என்று கூறி ஈரானின் அணுஆயுத கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் சேர்த்து கடந்த பிப்.28 ஆம் தேதி நடத்திய அதிரடி தாக்குதலில் ஈரானின் மதகுரு அலி அயத்துல்லா கமேனி உள்பட ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் சௌதி, குவைத், துபை உள்ளிட்ட நகர்கள் மீதும் ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் ஏவி கடுமையான தாக்குதலைத் தொடர்ந்தது. அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை ஈரான் குறிவைத்துத் தாக்கியது.

இந்தத் தாக்குதல் தொடர்ந்த நிலையில், உலக வர்த்தகத்தில் மிகவும் முக்கிய கடல்வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் தெரிவித்தது. இதனால், இந்தியா, சீனா உள்ளிட்ட அதிகளவிலான மக்கள்தொகை கொண்ட நாடுகள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டன. மேலும், கச்சா எண்ணெய் வரத்து இல்லாததால் எல்பிஜி சிலிண்டர், டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஏப். 8 ஆம் தேதி போர்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த டிரம்ப், பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் ஈரான் - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம், ஒப்பந்தம் ஏற்படவிட்டால் அதிநவீன சக்திவாய்ந்த ஏவுகணைகள் வைத்து தாக்குவோம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.

போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள மாட்டார் என்று வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. அமைதிப்பேச்சுக்கு அவகாசம் அளிக்கும் வகையில், தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளதால், உலகளவில் பதற்றம் தணிந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory