» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் ரூ.136.35 கோடியில் உயர் சிறப்பு மருத்துவமனை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
வெள்ளி 29, செப்டம்பர் 2023 4:24:39 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.136.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் ரூ.4.06 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 6 துணை சுகாதார நிலையங்கள், 1 செவிலியர் குடியிருப்பு கட்டிடம், 2 வெளி நோயாளிகள் பிரிவு, 1 சுகாதார ஆய்வகம்,1 கண் அறுவை சிகிச்சை மையம் ஆகியவற்றை சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் முன்னிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (29.09.2023) திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.60 இலட்சம் மதிப்பில் கண் அறுவை சிகிச்சை மையக் கட்டிடம், பேரிலோவன்பட்டி மற்றும் புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா ரூ.60 இலட்சம் மதிப்பில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம், ஈராச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பில் செவிலியர் குடியிருப்பு கட்டிடம், பி ரூ டி காலனி, மடத்தூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.25 இலட்சம் மதிப்பில் நகர்புற பொது சுகாதார ஆய்வகம், மரந்தலை, வகுந்தான்குப்பம், சொக்கன்குடியிருப்பு, விஜயாபுரி, ஆத்திகுளம், மெட்டில்பட்டி ஆகிய துணை சுகாதார நிலையங்களில் மொத்தம் ரூ.4.06 கோடி மதிப்பில் 11 புதிய மருத்துவ கட்டிடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.136.35 கோடி மதிப்பில் தரைதளம் மற்றும் 7 தளம் 3,21,107 சதுரடி பரப்பளவில் 650 படுக்கை வசதிகளுடன் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடம், ரூ.38.53 கோடி மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல விபத்து சிகிச்சை மையம், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம், காயல்பட்டிணம் அரசு மருத்துவமனையில் ரூ.62.35 கோடி மதிப்பில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் மற்றும் சிறப்பு வார்டு கட்டிடம், முதலூர், காயாமொழி, ஏரல், மெஞ்ஞானபுரம், வல்லநாடு ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா ரூ.50 இலட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார கட்டிடங்கள்,
தருவை ரோடு, பி ரூ காலனி, மடத்தூர், கணேஷ்நகர் பகுதிகளில் ரூ.60 இலட்சம் மதிப்பில் கூடுதல் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள், தென்திருப்பேரையில் ரூ.1.20 கோடி மதிப்பில் புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ஆனந்தபுரத்தில் ரூ.60 இலட்சம் மதிப்பில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம், பாத்திமா நகர், லூர்தம்மாள்புரத்தில் தலா ரூ.80 இலட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், நாகலாபுரத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், கீழஈராலில் ரூ.56.40 இலட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம்,
இராணி மஹாராஜபுரம், முக்காணி, பெரியதாழை, கடாட்சபுரம், விஜயராமபுரம், பண்டகசாலை, ஸ்ரீவைகுண்டம் மார்கெட், கோமன் நடுத்தெரு, முத்துகிருஷ்ணாபுரம், முத்தம்மாள் காலனி, டி.எம்.பி. காலனி, அம்பேத்கார் நகர், கந்தசாமிபுரம், கீழகானம், காமநாயக்கன்பட்டி, வானரமுட்டி, சிந்தலக்கரை, அயன்பொம்மையாபுரம், குருவார்பட்டி, மேல்மாந்தை, சிவஞானபுரம், விருசம்பட்டி ஆகிய துணை சுகாதார நிலையங்களில் மொத்தம் ரூ.253.29 கோடி செலவில் 39 மருத்துவ கட்டிடங்கள் பணிகள் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ கட்டமைப்புகள் 303 துணை சுகாதார நிலையங்கள், 60 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 2 வட்டம் சாரா மருத்துவமனைகள், 6 வட்டார மருத்துவமனைகள், 1 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, 1 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் 708 நகர்ப்புற நலவாழ்வு மைய பணிகள் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 22 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு தூத்துக்குடி மாநகராட்சியில் 14, கோவில்பட்டி நகராட்சியில் 2, காயல்பட்டினம் நகராட்சியில் 1 என மொத்தம் ரூ.4.25 கோடி செலவில் 12 மையங்களுக்கான கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் 06.06.2023 அன்று தூத்துக்குடி மாநகராட்சியில் 10 இடங்களில் திறந்து வைத்தார். சிவஞானபுரம் ஊரக ஆரம்ப சுகாதார நிலையத்திற்குரூ.1.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.50 கோடி செலவில் 7 துணை சுகாதார நிலையங்கள், ரூ.65 இலட்சம் செலவில் 3 ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய மருத்துவ கட்டிடங்கள், ரூ.12.25 கோடி செலவில் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சுவுPஊசு ஆய்வக கட்டிடம், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவு கட்டிடம், பல்நோக்கு தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் ஆகிய சேவைகள் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன் பெற்று வருகின்றனர். மொத்தம் ரூ.14.40 கோடி செலவில் 13 புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருது தமிழ்நாடு இதுவரை 478 பெற்றுள்ளது. இந்த வருடத்தில் 239 விருதுகள் பெற்றுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் இளையரசநேந்தல் ஆரம்ப சுகாதார நிலையம், கருங்குளம் சமுதாய சுகாதார நிலையம், முடிவைதனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையம், முள்ளக்காடு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், தருவைரோடு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், விளாத்திக்குளம் அரசு மருத்துவமனை ஆகியவற்றிற்கு 6 விருதுகள் கிடைத்துள்ளது.
மகப்பேறு அறை, கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்ட சான்றிதழ் தமிழ்நாடு இதுவரை 77 சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த வருடத்தில் 43 சான்றிதழ் பெற்றுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ஆகியவை விருதுகள் பெற்றுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு மானியக் கோரிக்கை அறிவிப்புகள் 2023-24ல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.80 இலட்சம் மதிப்பில் நவீன நரம்பியல் அறுவை கிச்சைக்கான உபகரணங்கள், ரூ.40.38 இலட்சம் மதிப்பில் உடற்கூராய்வு மையம் மேம்படுத்துதல், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.1.25 கோடி புதிய ஒருங்கிணைந்த ஆய்வக கட்டிடம், விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் ரூ.5.55 கோடி மதிப்பில் புதிய கட்டிடம், கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.80 இலட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய கட்டணப் படுக்கைகள், புன்னகாயல், புதுக்குடி, மதிமண்விலை பகுதியில் ரூ.1.08 கோடி மதிப்பில் புதிய துணை சுகாதார நிலையக் கட்டிடங்கள், தருவை ரோடு, மடத்தூர், கணேஷ்நகர், காயல்பட்டினம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.2.40 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிலேயே தூத்துக்குடி மாவட்டத்தில்தான் அதிக மருத்துவ கட்டிடப்பணிகள் நடைபெறுகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று சமூக நலன்மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்கள். அடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லிக்கு கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவுக்கு சென்றபொழுது அங்குள்ள ஆம் ஆத்மி நோபுலார் கிளினிக்கை பார்த்துவிட்டு தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 63 நகராட்சிகளிலும் 708 மருத்துவமனைகள் கட்டப்படும் என்று அறிவித்தார்கள். கடந்த ஜூன் 6 அன்று 500 மருத்துவமனைகளை திறந்து வைத்தார்கள். இம்மருத்துவமனைகள் ஒவ்வொன்றும் 1 மருத்துவர், 1 செவிலியர், 1 சுகாதார ஆய்வாளர் மற்றும் 1 உதவியாளருடன் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் , வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும், பழுதடைந்த கட்டிடங்களையும் புதுப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள். இதற்கு தேவையான நிதியினை 15வது நிதியாணையம் மூலம் பெறுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். கடைக்கோடி மனிதனுக்கும் மருத்துவ சேவை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இன்று உலக இதய நாள் அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, இதய நாள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நாம் இதயத்தை காத்து நோயற்ற வாழ்வு வாழ வேண்டும். இதயத்தை காப்போம் வாழ்நாட்களை ஆரோக்கியமாக கழிப்போம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவமும், கல்வியும் தனது இரண்டு கண்கள் என்று கூறி அத்துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். கல்வி மூலம் எதிர்கால சமுதாயத்தினர் அறிவாற்றல் மிக்கவர்களாக உருவாவதற்கும், குக்கிராமங்களில் உள்ள மக்களையும் மருத்துவ சேவை சென்றடைய வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் முதியோர்கள், கை, கால் முடங்கியுள்ளவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தொடர் மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல், நம்மை காக்கும் 48 திட்டத்தில் விபத்தில் சிக்கியவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தாலும் அவர்களின் சிகிச்சைக்கு தமிழ்நாடு அரசு ரூ.1 இலட்சம் வழங்குகிறது. இத்திட்டங்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே விபத்தில் சிக்கியவர்களை அரசு மருத்துவமனைகளில்தான் சேர்க்க வேண்டும் என்றில்லாமல் தனியார் மருத்துமனைகளிலும் சேர்த்து சிகிச்சை பெறலாம்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்ட காப்பீட்டு திட்டம், ஒன்றிய அரசின் காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில்தான் காப்பீட்டு திட்டத்தில் அடையாள அட்டை பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மூலம் காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், எடை குறைந்த குழந்தைகளை கண்டறிந்து தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலமான 1996-2001 கால கட்டத்தில் தொடங்கப்பட்டு மக்களுக்கு சிறப்பான சேவை வழங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் தினமும் 2500 வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் 1200 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1998ம் ஆண்டு தொடங்கப்பட்ட இம்மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டின் துணை முதல்வராக இருந்தபோது திறந்து வைத்தார்கள்.
தற்போது கூடுதலாக கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் செவிலியர் கல்லூரியில் கொண்டு வரப்பட வேண்டும் என சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்தார்.
முன்னதாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.136.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டி.எஸ்.செல்வநாயகம், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா (ஒட்டப்பிடாரம்), ஜி.வி. மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.அனிட்டா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம்ஞானதேவ்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவக்குமார், இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (பொ) சி.அகத்தியன், இணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) பொற்செல்வன் (தூத்துக்குடி), ஜெ.வீ.பா.குணசேகரன் (கோவில்பட்டி), பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தம்பிரான் தோழன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலேஸ் ஜெயமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடுகள் இழப்பிற்கான இழப்பீடு நிதியுதவி: ஆட்சியர் சுகுமார் வழங்கினார்
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:56:46 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் மே 1ஆம் தேதி மது விற்பனைக்கு தடை : ஆட்சியர் உத்தரவு
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:36:09 PM (IST)

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்!
திங்கள் 28, ஏப்ரல் 2025 12:35:26 PM (IST)

ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் : ஆட்சியர் தகவல்
திங்கள் 28, ஏப்ரல் 2025 10:30:19 AM (IST)

கார்கள் நேருக்கு நேர் மாேதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேர் பலி
திங்கள் 28, ஏப்ரல் 2025 9:06:47 AM (IST)

திருநெல்வேலியில் திருநங்கைகள் தினம் குறைதீர் முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
சனி 26, ஏப்ரல் 2025 4:43:20 PM (IST)
