» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மகளுக்கு நாளை மறுநாள் திருமணம் : ஜவுளிக் கடை ஊழியர் குத்திக்கொலை!

செவ்வாய் 21, நவம்பர் 2023 10:50:22 AM (IST)

புளியங்குடியில் மகளுக்கு நாளை மறுநாள் திருமணம் நடக்க இருந்த நிலையில் ஜவுளிக்கடை ஊழியர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டம் புளியங்குடி சுள்ளக்கரை தெருவைச் சேர்ந்தவர் அய்யாக்குட்டி (55). இவர் புளியங்குடியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கனகலட்சுமி. இவர்களுடைய மகள் ஆவுடைச்செல்வி. எம்.எஸ்சி. பட்டதாரி ஆவார். அய்யாக்குட்டியின் மகள் ஆவுடைச்செல்விக்கும், ராயகிரி பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்க இருந்தது.

இதற்காக திருமண ஏற்பாடுகளை அய்யாக்குட்டி மும்முரமாக கவனித்து வந்தார். உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்களையும் கொடுத்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அய்யாக்குட்டி, அவரது மனைவி, மகள் ஆகியோர் வீட்டில் தனித்தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். மேலும் வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

நள்ளிரவில் ஒரு மர்மநபர் வீட்டிற்குள் புகுந்தார். அங்கு தூங்கிக் கொண்டு இருந்த அய்யாக்குட்டியை கத்தரிக்கோலால் அந்த நபர் குத்தினார். சத்தம் கேட்டு கனகலட்சுமி, ஆவுடைச்செல்வி ஆகியோர் ஓடி வந்தனர். ஆனால், அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த அய்யாக்குட்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அவரது மனைவி, மகள் கதறி அழுதனர்.

இதுகுறித்து உடனடியாக புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஸ்வரன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய்காந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அய்யாக்குட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பேன்ட், சர்ட் அணிந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்து, அய்யாக்குட்டி வீட்டிற்குள் நுழைவதும், பின்னர் வெளியே வருவதும் போல் காட்சிகள் இடம் பெற்று இருந்தது. அந்த வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. எனினும் பெண் கொடுத்த மறுத்த காரணத்தால் இந்த கொலை சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள். மகளுக்கு நாளை மறுநாள் திருமணம் நடக்க இருந்த நிலையில் ஜவுளிக்கடை ஊழியர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory