» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்: 5,181 மாணவியர்களுக்கு பற்று அட்டை வழங்கல்!
திங்கள் 30, டிசம்பர் 2024 3:37:23 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்தின் மூலம் 5,181 மாணவியர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் வங்கி பற்று அட்டைகளை சபாநாயகர் மு.அப்பாவு, அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் வழங்கினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.12.2024) தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்ற 5,181 மாணவியர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை (Debit Card) வழங்கினார்கள்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆப.,, துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் சட்டமன்ற பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தபட்டு வருகிறது. அதில் குறிப்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், அரசு சேவை இல்லம், பணிபுரியும் மகளிர்களுக்கான தங்கும் விடுதி, முதியோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன், திருநங்கைகள் நலன், மகளிர் தொழில் கூட்டுறவு சங்கங்கள், குழந்தை திருமண தடைச் சட்டம் 2006, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005, வரதட்சணை தடுப்பு சட்டம் 1961, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு தடை மற்றும் தீர்வு சட்டம் 2013, ஒருங்கிணைந்த சேவை மையம் என பல்வேறு திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதலமைச்சர், பெண்களின் உயர்கல்வி மேம்பாட்டிற்கான வரலாற்றுச் சாதனை திட்டமான புதுமைப் பெண் திட்டத்தினை 5.9.2022 அன்று தொடங்கி வைத்தார்கள். புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப் படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000/ வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் கலை மற்றும் அறிவியல், தொழிற்சார் படிப்புகள், இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள், பட்டயப் படிப்பு. தொழிற்கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு (முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும்) போன்ற உயர்கல்வி படிப்புகள் படிக்கும் மாணவியர்கள் பயன்பெறுவர்.
அதேபோன்று பிற மாநிலங்களில் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் IIT, NIT, IISER போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவிகளும் இத்திட்டத்தில் பயன்பெறுவர்.
வருமான உச்சவரம்பு ஏதுமின்றியும், மற்ற கல்வி உதவித் தொகை திட்டங்களின் பயன்பெற்று வந்தாலும் (BC /SC/ST/ Minority Scholarship) மற்றும் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இருந்தாலும் இந்த திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
இத்திட்டத்தின் வாயிலாக திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 8586-க்கும் மேற்பட்ட மாணவிகள் இதுவரை தங்களது உயர்கல்வி கனவினை நினைவாக்கி வருகின்றனர். அதனை தொடர்ந்து, அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற ஏழை, எளிய மாணவர்களையும் சாதனையாளர்களாக உருவாக்கிட "தமிழ்ப் புதல்வன்” எனும் மாபெரும் திட்டம் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 09.08.2024 முதல் துவங்கப்பட்டு இன்று வரை 8941 மாணவர்கள் தங்களது உயர்கல்வி கனவினை நினைவாக்கி வருகின்றனர்.
தற்போது அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கான மூவலூர் இராமாமிர்த அம்மையார் "புதுமைப்பெண் திட்டமானது அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு "புதுமைப்பெண் விரிவாக்கம் திட்டமாக" இன்றைதினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் 83 கல்லூரிகளை சார்ந்த 5,181 மாணவிகளுக்கு இன்று பற்று அட்டைகள் (Debit Card) வழங்கப்பட்டுள்ளது.
மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டை (Debit Card) Pre Activate செய்யப்பட்டுள்ளது. பணம் வங்கி கணக்கில் வரப்பெற்ற விவரம் கைப்பேசியில் குறுஞ்செய்தியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணை இயக்குநர் (சிறப்புத் திட்டம்) உமாதேவி, மாவட்ட சமூக நல அலுவலர் தாஜூன்னிசா பேகம், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) இலக்குவன், முன்னோடி வங்கி மேலாளர் ஐ.கணேஷ் மணிகண்டன் உட்பட ஆசிரியர்கள், மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.