» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 9-ம் தேதி முதல் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 3, ஜனவரி 2025 12:41:59 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் தமிழர் திருநாள் தைப்பொங்கல் 2025 முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது தொடர்பான துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கா.ப.கார்த்திகேயன் தலைமையில் (02.01.2025) நடைபெற்றது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும், கொண்டாட வழிவகை செய்யும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கிட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2025 பொங்கல் பரிசு திட்டம் 2025-ஜனவரி 9-ம் தேதி அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இப்பணி தொடங்கப்படும். இச்சிறப்பு பணிகளுக்கு முன்னேற்பாடுகள் செய்வதற்கும் இப்பணிகளை கண்காணித்திடவும், மேற்பார்வை செய்திடவும், தகுதியான நபர்களுக்கு தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்திடவும், இப்பணி நல்லமுறையில் நடந்திட ஒவ்வொரு வட்டத்திற்கும் துணை ஆட்சியர் நிலையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி வட்டத்திற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர், பாளையங்கோட்டை வட்டத்திற்கு தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), மானூர் வட்டத்திற்கு திருநெல்வேலி கோட்டாட்சித் தலைவரும், சேரன்மகாதேவி வட்டத்திற்கு மாவட்ட ஆய்வுக்குழு அலுவலரும், அம்பாசமுத்திரம் வட்டத்திற்கு தனித் துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்), நாங்குநேரி வட்டத்திற்கு சேரன்மகாதேவி சார் ஆட்சியரும், இராதாபுரம் வட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரும், திசையன்விளை வட்டத்திற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும் சிறப்பு மேற்பார்வை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒவ்வொரு குறுவட்டத்திற்கும் வட்டாட்சியர் நிலையில் நடமாடும் கண்காணிப்பு குழு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொங்கல் பரிசு 09.01.2025 முதல் பொங்கல் திருநாளுக்கு முன்னர் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதற்காக நியாய விலைக்கடைகளுக்கும் 03.01.2025 (வெள்ளிக்கிழமை) மற்றும் 10.01.2025 (வெள்ளிக்கிழமை) பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட இருப்பதால் அதனைப் பெறும் ஆர்வத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்க விநியோகத்தை முறைப்படுத்தும் வகையில் தெரு வாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் முற்பகல் 100 பேருக்கும், பிற்பகல் 100 பேருக்கும் மற்றும் இரண்டாம் நாள் முதல் நாள் ஒன்றுக்கு 150 அல்லது 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, 03.01.2025 முதல் 08.01.2025 வரை டோக்கன்கள் வழங்கப்படும். பொங்கல் பரிசு விற்பனை முனைய இயந்திரத்தின் (POS) மூலம் கைரேகை சரிபார்க்கும் முறைப்படி நியாய விலைக் கடைகளில் வழங்கப்படவுள்ளது. தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படாமல் திரும்ப அனுப்பப்படமாட்டாது.
தகுதியான அனைவருக்கும் பொங்கல் பரிசு பொருட்களும், இலவச வேஷ்டி, சேலைகளும் ஒருசேர வழங்கப்படும். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வேண்டுமானாலும் பொங்கல் பரிசினை நியாய விலைக் கடைகளுக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் பரிசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டதும் அவர்களது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியினை கண்காணித்திட மாவட்ட அளவிலும், வட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் - 9342471314 மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1967 மற்றும் 1800-425-5901 என்ற எண்களுக்கும் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, திருநெல்வேலி மண்டல இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) முருகேசன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சோ.பாக்கியலட்சுமி, திருநெல்வேலி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் வே.காண்டீபன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.