» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பொது அமைதியை குலைக்கும் வகையில் பதிவுகள் வெளியிட கூடாது: ஆட்சியர் அறிவுறுத்தல்!

வியாழன் 9, ஜனவரி 2025 12:44:13 PM (IST)



பொது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட கூடாது என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர் கீதா, சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், உதவி காவல் கண்காணிப்பாளர் (நாங்குநேரி கோட்டம்) பிரசன்னகுமார், மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கான இடங்களை தேர்ந்தெடுப்பது; அனுமதிக்கப்படாத இடங்களில் நிகழ்வுகளை நடத்துவது, சுவரொட்டிகள் ஒட்டுவது, பதாகைகள் வைப்பதை தவிர்ப்பது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் அனைத்து தரப்பினரிடையே நல்லிணக்கமான சூழல் நிலவிடுவதை உறுதி செய்திட ஒத்துழைக்க வேண்டும்; 

சமூக வலைத்தளங்களில் பொது அமைதியை குலைக்கும் வகையில் பதிவுகள் மேற்கொள்வதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் சமூகங்களிடையே பூசல்களை ஏற்படுத்தும் செயல்களால் மாவட்டத்தின் வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு, வணிகம், பொதுமக்களின் வாழ்வாதாரம் என அனைத்தும் பாதிக்கப்படும் என்பதால் இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை தவிர்க்க அனைத்து இயக்கங்களும் பொதுமக்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

உயர்நீதிமன்றம், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமல் ஜனநாயக முறைப்படி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற நிகழ்வுகளை நடத்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அனுமதிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் தலைமையிலும், திருநெல்வேலி கோட்டாட்சியர் அலுவலர் தலைமையிலும் கோட்ட அளவில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கூட்டம் நடைபெற்றது. 

இன்று மாவட்ட அளவிலான கூட்டத்தில், பிரதிநிதிகளிடம் பேரணிகள் போன்றவை நடத்துவது தொடர்பாக கோட்ட அளவில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட இடங்கள் குறித்து தாலுகா வாரியாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், கோட்ட அளவிலான கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட இடங்கள் தவிர்த்து அமைப்புகள் சார்பில் வேறு இடங்கள் ஏதேனும் இருப்பின் வரும் 13.1.2025 திங்கட்கிழமைக்குள் பரிந்துரைக்கலாம் எனவும், அவையும் பரிசீலிக்கப்பட்டு தகுந்த இடமாக இருந்தால் பட்டியலில் சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

விளம்பர பதாகைகள் அமைக்க தொடர்புடைய காவல் நிலையத்தில் தடையின்மை சான்று பெற்ற பிறகு மாநகர பகுதிகளுக்கு மாநகராட்சி அலுவலகத்திலும், பிற பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய கட்டணம் செலுத்தி அனுமதி பெற்று கொள்ளலாம். சாலை சந்திப்புகள், மைய தடுப்புகள், வழிபாட்டு இடங்கள், அரசு கட்டிடங்கள் ஆகிய இடங்களிலும் நடைபாதைகளை மறித்தும் விளம்பர பலகைகள் அமைக்க கூடாது. தனியார் இடத்தின் அருகே அமைக்கும் பொழுது இட உரிமையாளர் அனுமதி பெற்று கொள்ள வேண்டும். 

மேலும், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும். பேருந்து நிலையங்கள், வ.உ.சி மைதானம், சித்த மருத்துவக்கல்லூரி, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்த்திட கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், அரசு மற்றும் அரசு சார்ந்த கட்டிடங்கள், சாலை மையத்தடுப்புகள் போன்ற இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்கள் மற்றும் அச்சகங்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் தீவிர குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. இதற்கு காவல்துறையின் தீவிர நடவடிக்கையும் பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புமே முக்கிய காரணமாகும். இனிவரும் காலங்களிலும் குற்றச்செயல்களை மேலும் குறைத்திடவும், அனைத்து தரப்பினரிடையே நல்லிணக்கமான சூழ்நிலை தொடர்வதை உறுதி செய்திடவும் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும் தங்கள் தரப்பிலும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் ஆர்வமிகுதியாலும் தவறான வழிகாட்டுதல்களாலும் சில இளைஞர்கள் சமூக பூசல்களை ஏற்படுத்தும் வகையில் பதிவுகள் போடுவதை அனைத்து இயக்கங்களும் கடுமையாக கண்டித்திட வேண்டும் எனவும், இது தொடர்பாகவும் இளைஞர்களுக்கு அறிவுரைகளை வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

சமூகங்களிடையே பூசல்களை ஏற்படுத்தும் செயல்களால் மாவட்டத்தின் வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு, வணிகம், பொதுமக்களின் வாழ்வாதாரம் என அனைத்தும் பாதிக்கப்படும் என்பதையும், குற்றங்களில் தெரிந்தோ தெரியாமலோ ஈடுபடும் நபர்களின் குடும்பமே நிலைகுலைந்துவிடும் என்பதையும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்திட கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் இது தொடர்பான ஆலோசனைகள், கருத்துக்கள் இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் திருநெல்வேலி வருவாய் கோட்ட அலுவலர் கண்ணா கருப்பையா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காசி, அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், காவல்துறை அலுவலர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory