» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி: ஆர்வமுடன் பங்கேற்று அசத்திய பெண்கள்!
வியாழன் 16, ஜனவரி 2025 12:02:27 PM (IST)
நெல்லையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் ஆண்களை போன்று பெண்களும் கலந்து கொண்டு அசத்தினர்.
தமிழர் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் கிராமங்களில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், சிறுவர் சிறுமிகள் பங்கேற்கும் போட்டிகள் என கொண்டாட்டங்கள் களை கட்டும். இளைஞர்களுக்கான பாரம்பரிய வீர விளையாட்டுகளும் நடத்தப்படும்.
இவற்றில் எருது விடுதல், ஜல்லிக்கட்டு போட்டி, சேவல் சண்டை உள்ளிட்டவையும் அடங்கும். இதேபோன்று, வீர விளையாட்டுகளில் ஒன்றான இளவட்டக்கல் தூக்கும் போட்டியும் தென்னக கிராமங்களில் நடத்தப்படும். இதன்படி, நெல்லையில் வடலிவிளை பகுதியில் இளவட்டக்கல் தூக்கும் சாகச நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
ஆண்களுக்கு பெண்கள் இளைப்பில்லை காண் என்பதற்கேற்ப, பெண்களும் இளவட்டக்கல்லை தூக்கும் நிகழ்ச்சியில் துணிச்சலாக பங்கேற்றனர். அவர்களில் ஒரு சிலர் இளவட்டக்கல்லை தூக்கியது மட்டுமின்றி, சில வினாடிகள் வரை அவற்றை கழுத்து பகுதியை சுற்றி, சுற்றி கொண்டு வந்து சாகசம் காட்டினர். போட்டிகளை கிராம மக்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.