» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கிணற்றில் மிதந்த அக்காள்-தங்கை உடல்கள் மீட்பு: கொலையா? போலீசார் விசாரணை
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:50:05 AM (IST)
சுரண்டை அருகே கிணற்றில் அக்காள்-தங்கை பிணமாக கிடந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சாம்பவர்வடகரை கீழுர் பொய்கை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம். விவசாயி. இவருடைய மனைவி சரோஜா (62). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன் வைத்தியலிங்கம் இறந்து விட்டார். இதனால் சரோஜா தனது பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.
அதே பகுதியில் வசிப்பவர் பரமசிவம். இவருடைய மனைவி இந்திரா (49). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். வைத்தியலிங்கமும், பரமசிவமும் அண்ணன்-தம்பி ஆவர். இவர்கள் ஒரே குடும்பத்தில் அக்காள்-தங்கையை திருமணம் செய்துள்ளனர். அதாவது வைத்தியலிங்கத்தின் மனைவி சரோஜாவும், பரமசிவத்தின் மனைவி இந்திராவும் அக்காள்-தங்கை ஆவர்.
வைத்தியலிங்கம், பரமசிவம் குடும்பத்தினருக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக சொத்து பிரச்சினை இருந்தது. எனினும் சரோஜாவும், இந்திராவும் மிகவும் பாசத்துடன் பழகி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் சரோஜா, இந்திரா ஆகிய 2 பேரும் தங்களது வீடுகளில் இருந்து திடீரென்று மாயமானார்கள். எனவே அவர்களை குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.
அப்போது ஊருக்கு தெற்கே அவர்களுக்கு சொந்தமான கிணற்றில் சரோஜா, இந்திரா ஆகியோர் பிணமாக கிடந்தனர். சுமார் 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் சிறிதளவு தண்ணீர் உள்ளது. அதில் விழுந்ததில் தலையில் காயங்களுடன் அக்காள்-தங்கை இறந்து கிடந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்து சாம்பவர்வடகரை போலீசாருக்கும், சுரண்டை தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, சரோஜா, இந்திரா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து பிரச்சினையால் குடும்பத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த அக்காள்-தங்கை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்தனரா? அல்லது அவர்களை யாரேனும் கொலை செய்து உடல்களை கிணற்றில் வீசிச் சென்றனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அக்காள்-தங்கை எப்படி இறந்தனர்? என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். சுரண்டை அருகே கிணற்றில் அக்காள்-தங்கை பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடுகள் இழப்பிற்கான இழப்பீடு நிதியுதவி: ஆட்சியர் சுகுமார் வழங்கினார்
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:56:46 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் மே 1ஆம் தேதி மது விற்பனைக்கு தடை : ஆட்சியர் உத்தரவு
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:36:09 PM (IST)

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்!
திங்கள் 28, ஏப்ரல் 2025 12:35:26 PM (IST)

ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் : ஆட்சியர் தகவல்
திங்கள் 28, ஏப்ரல் 2025 10:30:19 AM (IST)

கார்கள் நேருக்கு நேர் மாேதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேர் பலி
திங்கள் 28, ஏப்ரல் 2025 9:06:47 AM (IST)

திருநெல்வேலியில் திருநங்கைகள் தினம் குறைதீர் முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
சனி 26, ஏப்ரல் 2025 4:43:20 PM (IST)
