» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருப்புடைமருதூர் நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்!

சனி 24, ஜனவரி 2026 10:35:09 AM (IST)


திருப்புடைமருதூரில் அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூசப் பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், திருப்புடைமருதூரில் உள்ள அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூசப் பெருந்திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள பழமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தாமிரவருணி நதியில் நீராடி தரிசனம் செய்வதுண்டு. 

நிகழாண்டு இத்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோயிலில் வியாழக்கிழமை கணபதி ஹோமம், சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலையில் கொடியேற்று வைபவத்தை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், கோயில் செயல் அலுவலர் கு. பாரதி, கட்டளைதாரர் தளபதி ராம்குமார், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மாலையில் அப்பர் வீதி உலா, இரவில் சுவாமி அம்பாள் புறப்பாடு, ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றது. திருவிழா நாள்களில் தினமும் காலை, இரவில் சுவாமி அம்பாள் வீதியுலா, ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெறும். திருவிழாவில் 9ஆம் நாளான ஜன.31ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 8.45 மணியளவில் தேரோட்டம், இரவு 7 மணிக்கு மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி, தொடர்ந்து புஷ்ப பல்லக்கில் சுவாமி அம்பாள் வீதியுலா ஆகியவை நடைபெறுகிறது.

 பிப்.1ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசத்தை முன்னிட்டு பிற்பகல் 1.30 மணிக்கு தாமிரவருணி ஆற்றில் தீர்த்தவாரி, இதையடுத்து கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மாலையில் அபிஷேக ஆராதனை, இரவு 11 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறும். பிப்.2ஆம் தேதி திங்கள்கிழமை காலையில் சுவாமி அம்பாள் வீதியுலா, மதியம் சாஸ்தா ப்ரீதி, மாலையில் சண்டிகேஸ்வரர் சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா, பைரவர் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. 

திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வீரவநல்லூர், முக்கூடல் மற்றும் திருநெல்வேலியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர், பக்தர்கள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory