» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இயற்கையைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை: அமைச்சர் பி.கீதா ஜீவன் அறிவுரை
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 3:16:25 PM (IST)

"காற்று, நீர், நிலம் உள்ளிட்ட இயற்கையைப் பாதுகாப்பது என்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்" எனச் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இன்று (10.02.2026), தமிழ்நாடு வனத்துறை (தூத்துக்குடி வனக்கோட்டம்) சார்பில் ‘வனமும் வன உயிரினங்களுக்கான பாதுகாப்பும்: சவால்களும் தீர்வுகளும்’ என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.
விழாவில், அமைச்சர் பி.கீதா ஜீவன் கலந்துகொண்டு 500 பள்ளி மாணவ, மாணவியர்களுக்குப் பயிற்சி நிறைவுச் சான்றிதழ்கள் மற்றும் தமிழ்நாடு வனத்துறை குறித்த பயிற்சி கையேடுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், "தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் 'வனமும் வாழ்வும்' என்ற தலைப்பில் மாநிலம் தழுவிய பயிற்சி முகாம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நடத்தப்பட்டது.
இதில் வனங்கள் மற்றும் அரிய வகை உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் சுமார் 20,000 மாணவர்கள் இப்பயிற்சியைப் பெற்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 25 பள்ளிகளிலிருந்து, பள்ளிக்கு 20 மாணவர்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்கள், தாங்கள் கற்றுக் கொண்ட அரிய தகவல்களை மற்ற மாணவர்களுக்கும் எடுத்துக்கூற வேண்டும். வன உயிரினக் கணக்கெடுப்பு, இந்திய வனப்பணி (IFS) அதிகாரிகளின் பணிகள் போன்றவற்றை அனுபவப் பாடங்கள் வழியாகப் புரிந்துகொள்வது அவசியம்.
மக்காத குப்பைகளான நெகிழிப் பைகள் சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக உள்ளன. வீடுகளில் உள்ள குப்பைகளை நெகிழிப் பைகளில் கட்டி கழிவுநீர் கால்வாய்களில் வீசுவதால் அடைப்புகள் ஏற்பட்டு சுகாதாரச் சீர்கேடு உண்டாகிறது. இது நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதிக்கிறது. எனவே, நெகிழிப் பைகளை முறையாகச் சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். இது குறித்துப் பெற்றோர்களிடமும் நண்பர்களிடமும் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வீடுகளில் கழிவுநீர் தொட்டி அமைக்கும்போது தரைப்பகுதியைச் சிமெண்ட் தளத்துடன் அமைக்க வேண்டும். இல்லையெனில் நிலத்தடி நீர் மாசுபடும். அதேபோல், கழிவுநீரைக் கண்மாய்களில் விடுவதைத் தவிர்க்க வேண்டும். விவசாயத்திற்குப் பயன்படும் நல்ல தண்ணீரில் கழிவுநீரைக் கலப்பது நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.
"வருங்காலத் தூண்களாகிய மாணவர்கள் நிலம், நீர், காற்று என அனைத்தையும் பாதுகாப்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும். நாம் பெற்ற அறிவைப் பகுத்தாய்ந்து இயற்கையைப் பேணிக் காக்க வேண்டும்," என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, மாவட்டக் கல்வி அலுவலர் முனியசாமி, வனச்சரக அலுவலர் அஜய், துணை ஆட்சியர் (பயிற்சி) மகேந்திரன், பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீராக்காதல் திருக்குறள் நாட்டிய நாடக நிகழ்ச்சி : சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 5:03:39 PM (IST)

கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:18:01 PM (IST)

மகாசிவராத்திரி விழா: பஞ்சபூத திருத்தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 10:24:45 AM (IST)

கல்லிடைக்குறிச்சி அரபிக் கல்லூரி முதல்வருக்கு பாராட்டு விழா!
திங்கள் 9, பிப்ரவரி 2026 7:39:59 AM (IST)

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
சனி 7, பிப்ரவரி 2026 4:03:18 PM (IST)

