» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

புதன் 11, மார்ச் 2026 8:15:49 PM (IST)

தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி ஒருவரை மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்தார். நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் இரவு முழுவதும் தேடியும் மாணவி கிடைக்காததால், குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை வேடநத்தம் கிராமத்தின் எல்லைப்பகுதியில் அந்த மாணவி ஆடைகள் கலைந்த நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்த குளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடய அறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுத் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

பின்னர், மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வேடநத்தம் கிராம மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் (ராமேஸ்வரம் செல்லும் பாதை) அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் சம்பவ இடத்திற்குச் சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கொலையாளிகளைக் கைது செய்யும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்" என மக்கள் சுமார் 4 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். இறுதியில், குற்றவாளிகளை இன்றிரவுக்குள் கைது செய்துவிடுவோம் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

இக்கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையின் பின்னணி மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க வேடநத்தம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory