» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பயிற்சி தொடக்கம்: சேகரிக்கப்படும் விபரங்கள்..!
திங்கள் 15, ஜூன் 2026 4:57:01 PM (IST)

2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முதற்கட்ட வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு களப்பயிற்சியாளர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று தொடங்கியது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-க்கான முதற்கட்ட பணிகள் தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான மாவட்ட அளவிலான பயிற்சி களப்பயிற்சியாளர்களுக்கு இன்று முதல் ஜூன் 17ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இப்பயிற்சி முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் இன்று தொடங்கி வைத்தனர்.
இந்த 3 நாள் பயிற்சியில் கலந்துகொள்ளும் களப்பயிற்சியாளர்கள், அடுத்தகட்டமாகப் பகுதி வாரியாகச் சென்று களத்தில் நேரடியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளவிருக்கும் கணக்கெடுப்பாளர்களுக்கு (Enumerators) முழுமையான பயிற்சிகளை வழங்க உள்ளனர்.
இந்தியாவில் முதன்முதலாக 1872ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. தற்போது நடைபெறவுள்ள கணக்கெடுப்பானது தொடர்ச்சியான 16ஆவது கணக்கெடுப்பாகும். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெறும் 8ஆவது கணக்கெடுப்பு இதுவாகும்.
சேகரிக்கப்படும் விபரங்கள்:
இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக இந்த முறை 'டிஜிட்டல் சென்சஸ்' (Digital Census) முறையில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கணக்கெடுப்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது மொபைல் போனில் இதற்கென உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக செயலி (Mobile App) மூலமாக விபரங்களைச் சேகரிக்க உள்ளனர்.
இந்த முதற்கட்ட கணக்கெடுப்பில் கீழ்க்கண்ட விபரங்கள் சேகரிக்கப்படவுள்ளன:
வீடுகளின் தற்போதைய நிலைமை மற்றும் குடும்பத் தலைவர் பற்றிய விபரங்கள்.
குடும்பத்தில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை.
குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, வடிகால் வசதி போன்ற அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகள்.
குடும்பத்திற்குரிய சொத்துக்கள் (வானொலி, தொலைக்காட்சி, கார், இருசக்கர வாகனம், கணினி, மடிக்கணினி).
குடும்பத்தில் பிரதானமாக உட்கொள்ளப்படும் உணவு வகைகள்.
சென்னை மக்கள் தொகை இயக்குநரகத்தின் இணை இயக்குநர் சின்னத்துரை, உதவி இயக்குநர் மற்றும் மாஸ்டர் பயிற்சியாளர் சரிதா ஜலால், புள்ளியியல் புலனாய்வாளர் அபிஷா சந்தோஷ், வட்டார புள்ளியியல் ஆய்வாளர் ராஜலெட்சுமி ஆகியோர் களப்பயிற்சியாளர்களுக்குப் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.
இது முற்றிலும் டிஜிட்டல் முறையில் நடைபெறுவதால், விபரங்களைச் சேகரிக்க வரும் கணக்கெடுப்பாளர்களுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கி, சரியான மற்றும் முழுமையான தகவல்களை வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிகழ்வில் தேர்தல் வட்டாட்சியர் முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே வழி: நெல்லையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:55:03 AM (IST)

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெள்ளி 31, ஜூலை 2026 10:55:45 AM (IST)

பாஜக பெண் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை: குடும்பத் தகராறில் விபரீதம்!
வெள்ளி 31, ஜூலை 2026 8:30:28 AM (IST)


