» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென் மாவட்டங்களில் கைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு!

சனி 1, ஆகஸ்ட் 2026 4:39:21 PM (IST)

CottonMinisterKK.jpg

தென் மாவட்டங்களில் கைத்தறித் தொழிலை மேம்படுத்தவும், தேவைப்படும் பட்சத்தில் முதல்வர் ஒப்புதலோடு கைத்தறி பூங்கா அமைக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கைத்திறன், கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் எம். விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள கூட்டுறவு நூற்பாலை மற்றும் வடசேரி நெசவாளர் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றைக் கைத்தறித் துறை அரசு முதன்மைச் செயலாளர் T.N. வெங்கடேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் முன்னிலையில் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1965-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆரல்வாய்மொழி நூற்பாலையில் தற்போது 22,800 ஸ்பிண்டில்கள் இயக்கப்பட்டு பல்வேறு ரக நூல் நூற்கப்பட்டு வருகிறது. இங்கு 62 நிரந்தரத் தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 244 பேர் பணியாற்றி வருகின்றனர். ஆலையின் அன்றாட உற்பத்தித் திறன், நூல் தரம் மற்றும் இயந்திரங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர், தொழிலாளர்களை நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார்.

தற்காலிகத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யக் கோரும் கோரிக்கை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கைத்தறிப் பொருட்களுக்கான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக ரத்து செய்யக் கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பரிசீலிப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, 382 இயங்கும் தறிகளுடன் செயல்பட்டு வரும் வடசேரி பெரியராசிங்கன் தெரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை அமைச்சர் பார்வையிட்டார். கடந்த 2025-2026 ஆம் நிதியாண்டில் இச்சங்கத்தில் ரூ.260.88 லட்சம் மதிப்பிலான ஜவுளிகள் உற்பத்தி செய்யப்பட்டு, ரூ.304.55 லட்சம் மதிப்பிலான விற்பனையுடன் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது.

கைத்தறி கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்துவதோடு, தென் மாவட்டங்களில் கைத்தறித் தொழிலை விரிவுபடுத்துவதே அரசின் நோக்கம். தேவைப்படும் பட்சத்தில் முதல்வரின் ஒப்புதலோடு தென் மாவட்டங்களில் கைத்தறி பூங்கா அமைக்கப்படும். வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டுப் பயனாளிகளுக்கு வழக்கம்போல் தடையின்றி இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆய்வின் போது, கன்னியாகுமரி கூட்டுறவு சங்க நூற்பாலை மேலாண்மை இயக்குநர் முருகையா, கைத்தறி உதவி இயக்குநர் ஜெயசுதா, வடசேரி கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர் பிரிட்மேன், துணை இயக்குநர் அருணாச்சலம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory