» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வக்பு சட்டத்திருத்த மசோதா காலத்தின் கட்டாயம் : நடிகர் சரத்குமார் வரவேற்பு
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:25:08 PM (IST)
வக்பு சட்டத்திருத்த மசோதா மற்றும் சீர்திருத்த செயல்பாடுகள் காலத்தின் கட்டாயம் என நடிகர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில் வக்ப் சட்டம் போன்ற ஒரு மதச்சட்டம் எவ்வாறு பொருந்தும்? இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு அத்தகைய சட்டம் இல்லை, முஸ்லிம்களுக்கு மட்டும் இத்தகைய சட்டம் என்பது பாரபட்சமானது என்று உணர வேண்டும். நமது தேசத்தில், தேசத்தின் நலன் கருதி சீரமைக்கப்பட வேண்டிய சட்டங்கள், செயல்பாடுகள் மக்களுக்கு நலன் பயக்குமேயானால் அதை மாற்றி அமைக்க முன்வருவதில் என்ன தவறு என்று தான் புரியவில்லை.
1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத்தலங்கள் சட்டம் இயற்றப்பட்டது, அதில் நாடு சுதந்திரம் பெற்றபோது இருந்த மதத்தலங்கள் அப்படியே இருக்கும் என்று கூறுகிறது. அதே நேரத்தில், 1995 ஆம் ஆண்டு, வக்ஃப் சட்டம் அமலுக்கு வந்தது. இது நாடு முழுவதும் உள்ள வக்ஃப் வாரியத்திற்கு எந்தவொரு சொத்தின் மீதும் அதன் உரிமைகளைக் கோரும் உரிமையை வழங்குகிறது. மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் இதை எதிர்த்து நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியாது.
மேலும் இப்போது உள்ள வக்ப் சட்டத்தின் 40-வது பிரிவின்படி எந்த ஒரு நிலத்தையும் வக்பு சொத்து என வக்பு வாரியத்தால் அறிவிக்க முடியும் என்பது தான் சட்டத்திருத்த மசோதாவிற்கான முதன்மை காரணம். டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம், நாட்டில் உள்ள பல மதவழிபாட்டு தலங்கள், அரசு கட்டிடம் உட்பட பலருக்கு சொந்தமான நிலங்கள் வக்பு சொத்துகளாக உரிமை கோரப்படுவதால், சொத்து பிரச்சனைகளை களைந்து, தீர்வு காண வேண்டும் என்பதால் இந்த சட்டத்திருத்தம் அத்தியாவசியமானது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
வக்பு வாரிய சொத்துகளின் தரவுகள், பதிவுகள், தணிக்கை விபரங்கள், புகார்கள் வழக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களை வெளியிட டிஜிட்டல் இணையதளம் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல திருத்தங்கள் செய்து வெளிப்படையான அரசு நிர்வாகம் மேற்கொள்வதில் எதிர்க்கட்சிகளுக்கு என்ன பாதிப்பு? மேலும், வக்பு திருத்த மசோதாவுக்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு, சுமார் 93 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் நேரடியாகவும், இணையவழியிலும் பெறப்பட்டு, ஆராய்ந்து, அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் தான் இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மேலும், தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை தங்கள் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் தேவைகளையும், சந்தித்து வரும் பிரச்சனைகளையும் அறிந்து, அவர்கள் அளித்த வாக்குறுதிகளின்படி அவரவர் சார்ந்த தொகுதி மக்களின் மேம்பாட்டிற்காக செயல்படுவதை விட்டுவிட்டு மத்திய அரசு எதைச் செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் செயல்படுவது நியாயமா? சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ஏற்கெனவே மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற வகையில் செயல்படுவதே மக்களுக்கு பயன் அளிக்கும் என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
மேலும், ஏற்கெனவே மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), முத்தலாக் தடைச் சட்டம், ஜம்மு & காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து என பல சட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, சிறுபான்மையினருக்கு எவ்வித இடையூறு ஏற்படுத்தாமல் நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டுள்ளது. இதுகுறித்து புதிதாக கட்சி தொடங்கியவர்கள் புரிதல் இல்லாமல் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
எனவே, வக்ப் சட்ட திருத்த மசோதா குறித்து தவறான கருத்துகளை மக்கள் மனதில் திணிப்பதற்கு பதிலாக, ஒட்டுமொத்த சிறுபான்மையினரின் நலனுக்காக கொண்டு வரப்படும் இச்சட்டத்திருத்தத்தை எதிர்க்கட்சிகள் மற்றும் எதிர்க்கும் கட்சிகள் ஏகமனதாக வரவேற்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த காட்சிகள் நீக்கம் : முதல்வர் ஸ்டாலின் தகவல்!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 5:37:26 PM (IST)

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு
வெள்ளி 4, ஏப்ரல் 2025 4:59:06 PM (IST)

தமிழக பாஜக புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை: அண்ணாமலை அறிவிப்பு
வெள்ளி 4, ஏப்ரல் 2025 4:55:48 PM (IST)

இந்து கோயில்களின் சொத்துகளை சுரண்டுகின்ற கொள்ளைக்கார கூட்டம் திமுக: ஹெச்.ராஜா ஆவேசம்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:54:10 PM (IST)

மாணவர்கள் ஆதார் வைத்துள்ளார்களா என ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:41:07 PM (IST)

ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பணம் பறிப்பு : போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:08:13 PM (IST)
