» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி : பல்கலை வேந்தராகிறார் தமிழக முதல்வர்

செவ்வாய் 8, ஏப்ரல் 2025 4:42:55 PM (IST)

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கள் ஒப்புதல் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள  நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பத்து மசோதாக்கள், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர் அதனை கிடப்பில் வைத்திருப்பதாகக் கூறி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பை வழங்கியதோடு, பல முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மாநில பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை கிடப்பில் வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. எனவே, மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய தேதிகளிலிருந்து, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவிடுவதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினால், இதுவரை நிலுவையில் இருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது. அந்த பத்து மசோதாக்களில் பல்கலை துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களும் உள்ளன. அதன்படி,

பல்கலை வேந்தராகிறார் தமிழக முதல்வர்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநர் மூலம் நியமனம் செய்யாமல், மாநில அரசே நியமிப்பதற்கான புதிய சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

இதனால், பல்கலை துணைவேந்தர்களை ஆளுநரே நியமனம் செய்து வந்த நிலையில், துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யலாம். இதன் மூலம், தமிழக முதல்வரே பல்கலை. வேந்தராகிறார் என்று கூறப்படுகிறது.

சித்த மருத்துவ பல்கலை

இந்திய மருத்துவ முறைகளுக்கான தனி சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தமிழகத்தில் தொடங்குவதற்கான சட்டமசோதாவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியின் பேரவையில் கொண்டுவந்தார். இந்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதில், சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வரும், துணைவேந்தராக மருத்துவத் துறை அமைச்சரும் இருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மசோதாவுக்கும் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.

மீன்வளப் பல்கலை

தமிழ்நாடு மீன்வளப் பல்கலை.யை ஜெ. ஜெயலலிதா பல்கலை. என பெயர் மாற்றம் செய்வது, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை மாநில அரசே நியமிக்க அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கும் ஒப்புதல் கிடைக்கப்பட்டுள்ளது.

மேலும், 7 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்த மசோதாக்களுக்கும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

4. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா

5.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

6.தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக திருத்த மசோதா

7.தமிழ் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

8. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா.

9. தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மசோதா

10. அண்ணா பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பி, அவர் கிடப்பில் வைத்திருந்த மசோதாக்களில் பெரும்பாலானவை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதாக்களாக இருக்கும் நிலையில் அவை அனைத்துக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால், இனி பல்கலை வேந்தராக ஆளுநர் நீடிக்க முடியாது என்றும், பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் ஸ்டாலின் செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், ஆளுநருக்கு அனுப்பி, உச்ச நீதிமன்றத்தால் ஒப்புதல் பெறப்பட்ட பத்து மசோதாக்களும் இன்று முதலே நடைமுறைக்கு வருவதாக சென்னை தலைமைச் செயலகத்தில் பேசிய திமுக வழக்குரைஞர் வில்சன் கூறியிருந்தார். மேலும், பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் நீக்கப்படுவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory