» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் : மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!!

செவ்வாய் 27, மே 2025 4:05:17 PM (IST)

வானிலை எச்சரிக்கையினை தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கேட்டுக்கொண்டுள்ளார்.

தென்மேற்கு பருவமழை குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (27.05.2025) வெளியிட்டுள்ள தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது -கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த 23.05.2025 அன்று முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பலத்த காற்றின் வாயிலாக மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தும் வீடுகள் இடிந்து, தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து துறை அலுவலர்களும் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டு, சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் குறித்த கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 26.05.2025 அன்று குமாரபுரத்தில் 68.8 மில்லி மீட்டர், தடிக்காரன்கோணத்தில் 68.4 மில்லி மீட்டர் மற்றும் மணலோடை பகுதியில் 65.5 மில்லி மீட்டர் அளவில் அதிக மழை பொழிந்துள்ளதாக தானியங்கி மழைமானி மூலம் கணக்கிடப்பட்டுள்ளது. அதுபோன்று மாவட்டத்தில் சராசரியாக 15.88 மில்லி மீட்டர் மற்றும் பொதுவாக 43.97 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மேலும் நமது மாவட்டத்திற்கு 26.05.2025 முதல் 30.05.2025 வரை 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 27.05.2025 முதல் 30.05.2025 வரை மன்னர் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 23.05.2025 முதல் 26.05.2025 வரை திருவட்டார் வட்டத்தில் 1 நபர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் தோவாளை வட்டத்தில் 1 வீடும், கல்குளம் வட்டத்தில் 5 வீடும், விளவங்கோடு வட்டத்தில் 16 வீடுகளும், திருவட்டார் வட்டத்தில் 12 வீடுகளும், கிள்ளியூரில் 6 வீடுகள் என மொத்தம் 40 வீடுகள் என மொத்தம் 40 வீடுகள் சேதமடைந்துள்ளது. இதில் 33 வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 வீடுகளுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பலத்த காற்றினால் தோட்டக்கலை பயிர்கள் அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் 0.72 ஹெக்டெரும், தோவாளை வட்டத்தில் 12.15 ஹெக்டெரும், கல்குளம் வட்டத்தில் 5.53 ஹெக்டெரும், விளவங்கோடு வட்டத்தில் 5.44 ஹெக்டெரும், திருவட்டார் வட்டத்தில் 2.25 ஹெக்டெரும், கிள்ளியூரில் 3.11 ஹெக்டெர் பயிர்கள் என மொத்தம் 29.20 ஹெக்டெர் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

23.05.2025 முதல் 26.05.2025 வரை 185 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. இன்று 109 மின்கம்பங்கள் என மொத்தம் 294 சேதமடைந்துள்ளது. இதில் 224 மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 மின்கம்பங்கள் மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 23 மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தது. அதனை தீயணைப்பு துறையினரால் முறிந்த அனைத்த மரங்களும் துரிதமாக அகற்றப்பட்டுள்ளது. 575 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றுள்ளனர். இவர்களில் 522 மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். மீதமுள்ள 53 மீனவர்கள் கரை திரும்ப தகவல் பரிமாற்றம் மீன்வளத்துறையினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் 48 அடி கொள்ளவு கொண்டது. தற்போதைய நீர் மட்டம் 37.87 அடி கனமழையின் காரணமாக 1403 கனஅடி நீர் அணைக்கு வரப்பெற்றுள்ளது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 77 அடி கொள்ளவு கொண்டது. தற்போதைய நீர் மட்டம் 42.55 அடி கனமழையின் காரணமாக 425 கனஅடி நீர் அணைக்கு வரப்பெற்றுள்ளது. இதில் 22 கன அடி நீர் உபரிநீராக வெளியெற்றப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், மீனவர்கள் தங்கள் கட்டுமரம், மீன்பிடி படகு போன்றவற்றை பாதுகாப்பாக நிலை நிறுத்திடவும், கடலுக்குள் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு அவ்வப்போது உதவி இயக்குநர், மீன்வளத்துறை அவர்களால் வழங்கப்படும் எச்சரிக்கையினை கருத்தில் கொண்டு மீனவர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் நீர்நிலைகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் எவரும் குளிக்கவோ, பொழுது போக்கிற்காக செல்பி எடுக்க செல்லவேண்டாம். 

இடி மற்றும் மின்னல்கள் ஏற்படும் போது பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருக்க வேண்டும். தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் இருக்கும் மின்கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் அருகில் யாரும் செல்லவேண்டாம் என்றும், அதனால் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்த்திடுவோம். பொதுமக்கள் கனமழை எச்சரிக்கையினை கருத்தில் கொண்டு மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory