» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாதம் பாதுகாப்போம் திட்டத்தில் பயன் பெற சுகாதாரத்துறை அழைப்பு

செவ்வாய் 27, மே 2025 5:48:58 PM (IST)

நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் தங்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்துகொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் "பாதம் பாதுகாப்போம்” என்னும் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடில்லாமல் இருக்கும் போது பாதங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து தக்க சமயத்தில் சிகிச்சை அளிக்க உதவும் திட்டம் ஆகும். இத்திட்டம் நீரிழிவு நோயாளிகள் பயன்பெறும் வகையில், தங்களின் பாதங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 சதவீதம் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 3,37,000 நீரிழிவு நோயாளிகள் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீரிழிவு நோய் சரியாக கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், அது உடலில் பல முக்கிய உறுப்புகளை பாதிக்கும். இதில் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டு பாதங்களில் உணர்விழப்பு ஏற்பட்டு புண்கள் உருவாகும். இதனால் கால்கள் அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்படும். மேலும் கண்களில் பார்வை இழப்பு, சிறுநீரக செயலிழப்பு, நரம்பியல் பாதிப்புகள், இதய நோய், பக்கவாதம், தோல் தொற்றுகள் போன்றவை அடங்கும். இந்த பக்கவிளைவுகளை தவிர்க்க, சரியான முறையில் மருந்துகள் உட்கொண்டு, உணவு கட்டுப்பாடு,உடற்பயிற்சி, மற்றும் தவறாமல் மருத்துவ பரிசோதனைகள் செய்வது அவசியமாகும்.

நீரிழிவு நோய் நீண்டகாலமாக இருப்பவர்களுக்கு, கால்களில் உணர்வு இழப்பு ஏற்பட்டு, சிராய்ப்பு, புண்கள், அல்சர் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இந்த நிலையில், பாதங்களில் ஏற்படும் புண்கள் ஆறாமல் சில நேரங்களில் பாதங்களை அகற்ற வேண்டிய நிலை உருவாகும். இதனை தடுக்கவும், நீரிழிவு நோயின் தாக்கத்தால் பாதங்களில் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து சிகிச்சை அளிக்கவே தமிழ்நாடு அரசு "பாதம் பாதுகாப்போம்” திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், மாவட்டத்திலுள்ள 47 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக Portable Vibration Sense Tester மற்றும் Monofilament கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. பெண் சுகாதார தன்னார்வலர்கள் நீரிழிவு நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று பாத பராமரிப்பு குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறார்கள்.

அதே நேரத்தில், நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களில் உணர்விழப்பு போன்ற கோளாறுகள் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்காக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம். ஆரம்பத்திலேயே இதுபோன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டால், பாதங்களில் ஏற்படக்கூடிய புண்களை முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை உடனடியாக பெற முடியும்.

மேலும், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் Diabetic Foot Clinic செயல்பட்டு வருகிறது. இங்கு அறுவை சிகிச்சை பிரிவில் "பாதம் பாதுகாப்போம்” திட்டத்தின் கீழ், சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் நபர்களுக்கு தொடக்க நிலையில் இருந்தே சிகிச்சை வழங்கப்படுகிறது. நாள்பட்ட புண்கள் கால்களை பாதிக்கும் நிலையை தவிர்க்கும் வகையில், இந்த கிளினிக்கில் முழுமையான மருத்துவ வசதிகள் அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் தங்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்து கொண்டு, ஆரம்பத்திலேயே தங்களை பாதிக்கக்கூடிய அபாயங்களை முன்கூட்டியே அறிந்து, முறையான சிகிச்சைகளை பெற்று, பாதுகாப்பாக வாழ முன்வர வேண்டும். நீண்ட நாட்களாக புண்களால் அவதிப்பட்டு வரும் நீரிழிவு நோயாளிகள் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து, தேவையான சிகிச்சையை பெற வேண்டும் என மாவட்ட சுகாதார அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory