» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.10 கோடியில் மீன் ஏலக்கூடம் : முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்

புதன் 28, மே 2025 12:54:13 PM (IST)



தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன் ஏலக்கூடத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் ரூ.10 கோடி செலவில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மீன்ஏலக்கூடம், வலை பின்னும் கூடம் மற்றும் மணப்பாட்டில் ரூ.41 கோடி செலவில் நீட்டிக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு மேம்பாட்டுப் பணிகளை மீனவர்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, திருவொற்றியூரில் இன்று (28.05.2025) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக 272 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சூரை மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட 426 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை என 13 முடிவுற்ற திட்டப் பணிகளை மீனவர்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்து, 

இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் மற்றும் ரோச்மா நகர் மீனவ கிராமங்களில் மொத்தம் 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி சிறப்பித்ததைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்கட்டமைப்பு நிதி (FIDF) உதவி திட்டத்தின்கீழ் ரூ.10 கோடி செலவில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மீன்ஏலக்கூடம் மற்றும் வலை பின்னும் கூடத்தினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பார்வையிட்டார். 

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் 1973ம் ஆண்டு கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு படகுகள் நிறுத்துவதற்கு 850 மீட்டர் நீளத்தில் படகுகள் அணையும் தளம் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 254 விசைப்படகுகள் மூலம் 4000 மீனவர்கள் தங்கள் மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர். மீனவர்கள் தங்கள் விசைப்படகுகள் மூலம் பிடித்துவரும் மீன்களை விற்பனை செய்திட ஏதுவாக ஏலக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 

மேலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து, அவர்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வேண்டுமென்ற நோக்கில் கூடுதலாக மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரினவளர்ப்பு உள்கட்டமைப்பு நிதி (FIDF) உதவியின்கீழ் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் ரூ.10 கோடி செலவில் 68 மீ X 55 மீ என்ற அளவில் ஒரு மீன் ஏலக்கூடம் மற்றும் 40 மீ X 20 மீ என்ற அளவில் ஒரு வலைபின்னும் கூடம் கட்டிமுடிக்கப்பட்டு இன்று மீனவர்களின் பயன்பாட்டிற்காக தழிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று, திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள மணப்பாடு கிராமம் தமிழ்நாட்டின் ஒரு பிரசித்திப்பெற்ற பழமையான மீனவ கிராமமாக திகழ்ந்து வருகிறது. 

இந்த கிராமத்தில் பழமையான மீன் இறங்கும் மையம் ஒன்று உள்ளது. மேலும், இந்த கிராமத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மீன்பிடி நடவடிக்கைகள் முக்கியமாக மேற்கொள்ளப்படுகின்றன. மணப்பாடு கிராமத்தில் சுமார் 3966 மீனவர்கள் 936 குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கியமான தொழிலாக மீன் பிடித்தல் மற்றும் அதனை சார்ந்ததாக உள்ளது. சுமார் 218 கண்ணாடி நாரிழை படகுகளையும் 2 கட்டுமர படகுகளையும் வைத்து இவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் தெற்கு கடற்கரையோரத்தில் உள்ள இக்கிராமத்தின் வாழ்வாதாரம் மீன்பிடித்தொழில் என்பதாலும், மேலும் தொடர்ந்து ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றத்தினாலும், நீர் மின்னோட்டத்தின் காரணத்தினாலும், இக்கடற்கரைப்பகுதியில் தொடர்ந்து மணல் சேர்வதனால் கடற்கரையானது நீண்டுகொண்டே போகிறது. இதனால் இப்பகுதி மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு சென்று வருவதில் சிரமத்திற்கு ஆளாகின்றனர். 

எனவே, இப்பிரச்சனையிலிருந்து மீனவ கிராமத்தினைப் பாதுகாத்திட வேண்டும் என்ற நோக்கில் மேற்கண்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு, வளர்ந்து வரும் இந்த முக்கியத்துவத்தையும், அவசரத் தேவையையும் அறிந்து தமிழ்நாடு அரசு மணப்பாடு கிராமத்தில் தூண்டில் வளைவினை நீட்டிக்கும் பணிக்காக ரூ.41 கோடி நிர்வாக அனுமதி வழங்கியத்தொடர்ந்து, தற்போது, 50 மீட்டர் நீளத்திற்கு பிரதான தூண்டில் வளைவினை நீட்டிக்கும் பணிகளும், 320 மீட்டர் நீளத்திற்கு துணைத் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளும் மற்றும் 1000 மீட்டர் நீளத்திற்கு மீன்பிடி படகுகள் சென்றுவர எதுவாக கடற்கரைப் பகுதியினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, இன்றையதினம் தழிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் பயன்களாக, மணப்பாடு கிராமத்தின் கரையோரம் அதிக அளவில் மணல் படிவதிலிருந்து பாதுகாக்கப்படுவதுடன் பருவகால மாறுபாட்டிலிருந்து பாதுகாக்கப்படும். இந்தப் பகுதியில் மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்படுவது உறுதி செய்யப்படும். மேலும், சிறந்த திறனுக்காகவும், அவர்களின் பிரச்சனைகளை களைய சிறந்த தளமாகவும் இந்த வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மண்டல இணை இயக்குநர் (மீன்வளம்) ந.சந்திரா, செயற்பொறியாளர் கணபதி ரமேஷ், உதவி இயக்குநர்கள் புஷ்ரா ஷப்னம், ஜனார்த்தனன், உதவி செயற்பொறியாளர் ஜெயசுதா, உதவிப் பொறியாளர் தயாநிதி, அரசு அலுவலர்கள் மற்றும் மீனவ மக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

அது இருக்கட்டும்மே 28, 2025 - 01:27:31 PM | Posted IP 172.7*****

இலங்கை ராணுவத்தினர் பறிமுதல் செய்த படகை மீட்டுத் தர முடியுமா அது மட்டும் சொல்லுங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory