» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டீசல் ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலில் பயங்கர தீவிபத்து : ரூ.10 கோடி டீசல் எரிந்து சேதம்!
திங்கள் 14, ஜூலை 2025 8:38:01 AM (IST)

திருவள்ளூர் அருகே சென்னையில் இருந்து டீசல் ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் ரயில் சேவை முடங்கியதால் பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.
சென்னை மணலியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து (ஐ.ஓ.சி.) பெட்ரோல், டீசல் ஆகியவை சரக்கு ரயில்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதுபோல் 52 வேகன்களில் டீசல் நிரப்பிய சரக்கு ரயில் ஒன்று நேற்று அதிகாலை மணலியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது. அந்த ரயிலில் இணைக்கப்பட்டு இருந்த ஒவ்வொரு வேகனிலும் 70 ஆயிரம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டு இருந்தது.
அந்த ரயில் அதிகாலை 5.30 மணி அளவில் திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்து அருகில் உள்ள பெரியகுப்பம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, ரயிலில் இணைக்கப்பட்டு இருந்த 3-வது வேகன் திடீரென பயங்கர சத்தத்துடன் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வேகன் தடம் புரண்டு, தண்டவாளத்தைவிட்டு இறங்கியது.
இதை கவனித்த ரயில் என்ஜின் டிரைவர், உடனடியாக அவசரகால பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்தினார். பின்னர், திருவள்ளூர் ரயில் நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த வழித்தட பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விபத்து குறித்து அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் தீ அடுத்தடுத்த வேகன்களுக்கும் பரவி, மளமளவென பற்றி எரிந்தது. யாரும் அதன் அருகே செல்ல முடியாத அளவுக்கு தீ பயங்கரமாக எரிந்தது. இதனால் வானுயரத்துக்கு கரும்புகை எழுந்தது. தொடர்ந்து தீ எரிந்து கொண்டு இருந்ததால் ஏற்பட்ட கரும்புகை, சுமார் 5 கி.மீ. சுற்றளவுக்கு அந்த பகுதியில் சூழந்தது. .
தீ விபத்து ஏற்பட்ட பகுதி அருகே குடியிருப்புகள் உள்ளன. அதில், சுமார் 50-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கரும்புகை சூழ்ந்ததால் அந்த பகுதியில் இருந்த சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்திற்கு உள்ளானார்கள். சம்பவ இடத்துக்கு அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா ஆகியோர் விரைந்து வந்தனர்.
தீயணைப்பு படையினருடன், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். முதல்கட்டமாக அந்த பகுதியில் குடியிருந்து வரும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி மக்களை போலீசாரும், அதிகாரிகளும் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் தங்களது குடும்பத்துடன், மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறி, வேறு பகுதியில் இருந்த திருமண மண்டபங்களுக்கு சென்றனர்.
அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு, பால், குடிநீர் போன்றவை வழங்கப்பட்டது. தொடர்ந்து வீடுகள் மற்றும் கடைகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்களையும் போலீசார் வேறு இடங்களுக்கு கொண்டு சென்றனர். பொதுமக்களில் சிலர், தங்கள் வீடுகளில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர்களை தங்களுடனேயே கொண்டு சென்றனர்.
இதைத்தொடர்ந்து, சரக்கு ரயிலில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. பேரம்பாக்கம், பூந்தமல்லி, ஊரப்பாக்கம், ஒரகடம் உள்பட 15-க்கு மேற்பட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரசாயனம் கலந்த நீர் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல பேரிடர் மீட்பு படையினர் 50 பேரும், 200-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்களும் தீப்பற்றாத வேகன்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
வேகன்களில் தீ மளமளவென பற்றி எரிந்ததால், அதனை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், 10 வேகன்களும் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தன. சுமார் 200 மீட்டருக்கு மின்சார கம்பிகளும் கருகின. 200 மீட்டருக்கு தண்டவாளங்கள் சேதம் அடைந்தன. மேலும் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான டீசல் எரிந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிறிதளவு தீ கட்டுக்குள் வந்ததும், ரயில்வே ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் தண்டவாளம், மின்சார கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 5-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் பணிகள் விறுவிறுப்பாக நடந்தன.
தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் விபத்து நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 மணி நேரத்துக்கும் அதிகமாக போராடி தீயை அணைத்தனர். அதாவது காலை 5.30 மணிக்கு ரயிலில் ஏற்பட்ட தீ, மதியம் 2 மணி அளவில் அணைக்கப்பட்டது.
இந்த பகுதியில் மின்சார ரயில்களுக்கு 2 தண்டவாளங்களும், எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு 2 தண்டவாளங்களும் உள்ளன. முதலில் ஒரு தண்டவாளத்தை சரி செய்து மின்சார ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்து காரணமாக 12 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை திருத்தணி-அரக்கோணம் வழித்தடங்களில் வந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் திருவள்ளூர், ஏகாட்டூர், கடம்பத்தூர் ஆகிய நிலையங்களில் நிறுத்தப்பட்டன. எக்ஸ்பிரஸ் ரயில்களில் வந்த பயணிகள் பஸ்கள் மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று இரவு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் விடிய விடிய மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதிய பயணம் தொடக்கம் : நண்பர் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்..!
புதன் 16, ஜூலை 2025 12:30:22 PM (IST)

மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு பந்தல்கால் நடும் விழா: தொண்டர்கள் குவிந்தனர்!
புதன் 16, ஜூலை 2025 11:55:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவிப்பு
புதன் 16, ஜூலை 2025 11:24:24 AM (IST)

பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய சம்பவம்: கேட் கீப்பர் பணி நீக்கம்!
புதன் 16, ஜூலை 2025 11:18:18 AM (IST)

கட்டிடங்களுக்கு சீல் வைக்க ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம்: தமிழ்நாடு அரசு
புதன் 16, ஜூலை 2025 11:15:21 AM (IST)

எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 5 பேர் கைது:பரபரப்பு வாக்குமூலம்
புதன் 16, ஜூலை 2025 10:50:48 AM (IST)
