» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜகவுடனான உறவு முறிவு: முதல்வருடன் ஓபிஎஸ் சந்திப்பு - பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கம்

வியாழன் 31, ஜூலை 2025 5:32:08 PM (IST)

தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இதுவரை கொண்டிருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொள்வதாக, அதன் முக்கியத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உயர்நிலைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொண்டது. 

அடுத்ததாக, தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் விரைவில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். மூன்றாவதாக, தேர்தலில் இப்போதைக்கு நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. எதிர்காலத்தில் அரசியல் நிலவரங்களுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

கூட்டணி முறிவுக்கான காரணத்தைக் கேட்டபோது, "காரணம் நாடு அறிந்ததே. அதை யாரும் சொல்லத் தேவையில்லை. பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பது அனைவருக்கும் தெரியும்.” என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

திமுக அரசை வீழ்த்த வேண்டுமென்பதில் உங்களுக்கு உடன்பாடா? என்ற கேள்விக்கு, பண்ருட்டி ராமச்சந்திரன், "யாரை வீழ்த்த வேண்டும் என்பது எங்களது குறிக்கோள் அல்ல. யாரையெல்லாம் வாழ்த்த வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்.” என்று சூசகமாக பதில் சொன்னார்.

முதல்வருடன் சந்திப்பு ஏன்? - இன்று காலை நடைப்பயிற்சியின் போது ஓபிஎஸ் - முதல்வர் ஸ்டாலின் சந்தித்துக் கொண்டது குறித்த கேள்விக்கு, "நான் சென்னையில் இருந்தால் தியோசோஃபிக்கல் சொசைட்டி வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கு. அங்கு இன்று முதல்வரும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டுச் சென்றேன்.” என்றார்.


மக்கள் கருத்து

JAY FANSAug 1, 2025 - 10:43:25 AM | Posted IP 104.2*****

ஜெ இருந்தவரை அவர் கார் டயரை கும்பிட்டு பதவி பெற்று கொண்டு, இன்று பதவிக்காக திமுகவினர் கார் டயரை கும்பிடுகிறார். இவரை எல்லாம் அரசியலை விட்டே விரட்டணும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory