» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு திருமண உதவி தொகை திட்டம் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு

வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 8:26:54 AM (IST)



அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு திருமண உதவி தொகை  திட்டம் மீண்டும் தொடரும் என்று என்று விளாத்திகுளத்தில் நடந்த எழுச்சி பயணத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சி சுற்றுப்பயணத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 7-ந் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கினார். அவர் சட்டசபை தொகுதி வாரியாக சூறாவளி சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். வடமாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

தொடர்ந்து தென்மாவட்டங்களில் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 10.10 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்திற்கு சிறப்பு பஸ்சில் வந்தார். அவரை தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.கவினர் உற்சாகமாக வரவேற்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பஸ்நிலையம் அருகே திரண்டிருந்த மக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: விளாத்திகுளம் விவசாயிகளின் பூமி. இங்கு ஒரு விவசாயியாக வந்துள்ள எனக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளீர்கள். நான் விவசாயி என்பதால் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து, வறட்சி, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட போது இந்த விளாத்திகுளத்திற்கு ரூ.400 கோடி கொடுத்தது அ.தி.மு.க. அரசு தான்.

விவசாயம், விவசாய தொழிலாளி தான் இங்கு பிரதானம். இந்த 2 ெதாழில்கள் சிறக்க அ.தி.மு.க. அரசு நிறைய திட்டங்களை கொண்டு வந்தது. ஜெயலலிதா இருக்கும்போதும் சரி, அவரது மறைவுக்கு பிறகும் சரி விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்த ஒரே அரசாங்கம் அ.தி.மு.க. அரசு. அ.தி.மு.க. ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் குளங்கள், நீர்நிலைகளில் தூர்வாரப்பட்டு கரம்பை மண் விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டது. இதனால் கண்மாயில் அதிக அளவில் நீர்தேக்கி விளைச்சலை அதிகரித்தோம்.

இப்படிப்பட்ட திட்டத்தை தி.மு.க. நிறுத்துவிட்டது. இதேபோல் தலைவாசலில் கால்நடை பூங்கா உள்பட ஏராளமான விவசாய திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டது. விவசாய திட்டங்களை கிடப்பில் போட்ட தி.மு.க. அரசு தேவையா? மக்காளச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்கம் இருந்தது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்த தகவல் எனக்கு கிடைத்த உடன் ரூ.156 கோடியை விவசாயிகளுக்கு நிவாரணமாக கொடுத்தது அ.தி.மு.க. அரசு. தொடர்ந்து அந்த படைப்புழுவை ஒழிப்பதற்காக ரூ.48 கோடியில் அரசாங்கமே பாதிக்கப்பட்ட நிலங்களை கண்டறிந்து, பூச்சி கொல்லி மருந்து தெளித்தது.

நான் விவசாயி என்பதால் விவசாயிகள் பாதிக்கப்படும்போது எல்லாம் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவி வழங்கியுள்ளேன். விவசாயியையும், விவசாய தொழிலாளியையும் 2 கண்கள் போன்று பாதுகாத்தது அ.தி.மு.க. அரசு. அ.தி.மு.க. அரசு அமைந்த உடன் வீட்டுமனை இருக்கின்ற ஏழைகள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தரமான காங்கிரீட் வீடு கட்டித்தரப்படும். வீட்டுமனையே இல்லாதவர்களுக்கு அ.தி.மு.க.வே தனியாக விலை கொடுத்து வீட்டுமனை வாங்கி வீடு கட்டிக்கொடுக்கும்.

அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் ஏழை என்ற சொல்லே இல்லாத நிலை உருவாக்கப்படும். மற்ற மாநிலத்திற்கு தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக திகழும். மக்களோடு மக்களாக பழகி, மக்களின் கஷ்டங்களை துயரங்களை வேதனைகள் என்ன என்பது அனுபவ ரீதியாக எனக்கு தெரியும். உங்களின் குடும்பத்தில் ஒருவனாக இருக்கிறேன். உங்களுக்கு ஒரு துயரம் என்றால் உடனடியாக தீர்த்து வைப்பேன். அ.தி.மு.க. மக்களுக்காகவே பாடுபடும்.

அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திருமண உதவி தொகை திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டம் தொடரும். தைப்பொங்கல் அன்று எல்லா குடும்பத்திற்கும் எம்.ஜி.ஆர். வேட்டி-சேலை வழங்கினார். தற்போது அதுமுறையாக வழங்கப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் வழங்கப்படும். தீபாவளி பண்டிகைக்கு தாய்மார்களுக்கு அற்புதமான சேலை, பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படும்.

விளாத்திகுளம் தொகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். ஓமந்தூரார் உருவப்படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைத்தேன். அவருக்கு அரசு விழா எடுக்க அறிவிப்பு வெளியிட்டேன். இசை மாமேைத நல்லப்பசாமிகள் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.

அ.தி.மு.க. ஆட்சியில் தாமிரபரணி-வைப்பாறு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நடவடிக்கை எடுத்தோம். அதற்கான நிலங்களை தேர்வு செய்தோம். அந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு இந்த வறண்ட பூமி பசுமையாக நல்ல விளைநிலங்களாக மாற்றிக்கொடுக்கப்படும்.

இவ்வளவு நேரம் எனக்காக காத்திருந்து விளாத்திகுளம் அ.தி.மு.க.வின் கோட்டை என்று நிரூபித்து உள்ளீர்கள். 2026 தேர்தலில் நமது கூட்டணி வேட்பாளர்களுக்கு உங்களது வாக்குகளை செலுத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும். தி.மு.க.வில் ஸ்டாலின் குடும்பம் தான் கட்சியிலும், ஆட்சியிலும் இருக்க முடியும். அப்படிப்பட்ட தி.மு.க. மீண்டும் வர வேண்டுமா?.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் வீடுவீடாக செல்கிறார்கள். 4 ஆண்டுகள் கழித்து தான் மக்களுக்கு 46 பிரச்சினைகள் இருப்பதாக முதல்-அமைச்சர் கண்டுபிடித்து உள்ளார். அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ளதால் தற்போது மனு வாங்குகிறார்கள். ஏற்கனவே கடந்த தேர்தலின் போது பெட்டிகளில் மனுக்களை வாங்கிச் சென்றார்கள். அதற்கு இன்னும் தீர்வு காணவில்லை. எனவே, அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்.

வல்லநாடு கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் விளாத்திகுளம், புதூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு ரூ.515 கோடியில் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியது அ.தி.மு.க. அரசு என்பதை இந்த நேரத்தில் கூறிகொள்கிறேன். ஆகவே மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம். பை, பை ஸ்டாலின். இவ்வாறு அவர் கூறினார். இந்த பிரசாரத்தை முடித்துக் கொண்டு, எடப்பாடி பழனிசாமி கோவில்பட்டிக்கு சென்றார். அங்கு இரவு ஓய்வெடுத்தார். முன்னதாக எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம், முதுகுளத்தூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ உட்பட பலர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து

TIRUCHENDUR MURUGARAug 1, 2025 - 10:43:19 AM | Posted IP 104.2*****

SURE YOU WILL WIN

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory