» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கல்லூரி வாழ்க்கை தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும் : மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை!

வெள்ளி 5, செப்டம்பர் 2025 12:47:17 PM (IST)



கல்லூரி வாழ்க்கை தான் மாணவ மாணவிகளின் உண்மையான எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்  பள்ளியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பள்ளிகல்வித்துறை இணைந்து நடத்தும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் ஆர்வமுடன் பயின்று 2024-25ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ,  மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,   கலந்துரையாடி, தொழிற்கல்விப் படிப்புகள், கல்லூரிகளை தேர்வு செய்தல், கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகள், தொழில்நுட்பக் கல்வி, தொழிற்பயிற்சி கல்வி படிப்புகள், கல்லூரிகள் தேர்வு, வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,   தெரிவித்ததாவது: மாணவ, மாணவியர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டுமென்ற நோக்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாணவர்களும் மதிப்பெண்களுக்கு ஏற்றவாரு உயர்கல்வியில் சரியான பாடப்பிரிவில் சேர்வதை உறுதிசெய்வது, அந்த மாணவர்கள் அனைவருக்கும் என்னென்ன விதமான படிப்புகள் உள்ளது, எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தால் எந்தெந்த மாதிரியான படிப்புகளில் சேரமுடியும். அதற்கு எந்தெந்த வழிகளிலெல்லாம் விண்ணப்பிக்கலாம், எந்தெந்த பாடப்பிரிவுகளுக்கு சமுதாயத்தில் வரவேற்பு கிடைக்கக்கூடியது, அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்களையெல்லாம் பள்ளி தலைமையாசிரியர்கள், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு தெரிவித்து அந்த தகவல்களையெல்லாம் மாணவர்களுக்கு தெரியப்படுத்தி உயர்கல்வி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்கள்.
 
தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையிலான தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலன்காக்கும் வகையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மாணவ, மாணவியர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரிக் கனவு, உயர்வுக்குப்படி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைகளையெல்லாம் நன்கு அறிந்து கல்வி கற்க வேண்டும். தமிழ்வழியில் படிப்பதற்கு நீங்கள் பெருமைகொள்ள வேண்டும். 

தமிழ்வழியில் படித்த பலபேர் தற்போது அரசின் பல்வேறு துறைகளில் உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 18850 மாணவ மாணவிகளில் 17059 பேர் உயர் கல்வியில் சேர்ந்துவிட்டனர். மீதமுள்ள 1791 பேரின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்துபடி திட்ட முகாம் நேற்று தொடங்கியது. கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டாரத்தைச் சேர்ந்த உயர்கல்வியில் சேராத மாணவிகளை அவர்களது பெற்றோர்கள் அவர்களை நீங்கள் திருமணம் செய்து வீட்டில் இருக்கப் போகிறவர்கள் உங்களுக்கு எதற்கு பட்டப்படிப்பு என்றிருக்கக்கூடாது. பட்டப்படிப்பு படித்தவர்கள் எதிர்காலத்தில் தங்களது குழந்தைகளை அறிவார்ந்தவர்களாகவும், கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தும் வளர்ப்பார்கள். 

பட்டப்படிப்பு பெண்ணின் குழந்தையின் வளர்ப்பையும், பட்டப்படிப்பு படிக்காத பெண்ணின் குழந்தையின் வளர்ப்பையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். குழந்தைகள் எதிர்காலத்தில் பெரியளவில் வளர வேண்டுமென்றால், அவர்களின் தாய்க்கு போதிய உலக அறிவு வேண்டும். அதற்கு  ஒரு பட்டப்படிப்பாவது படித்திற்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுக்கு திருமண செய்து வைக்க முயன்றால், அந்த வீட்டில் உள்ளவர்கள் மீது குழந்தை திருமண சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். 21 வயதுடைய பெண் தான் குழந்தை பேறு பெறுவதற்கு தகுதியான வயதாக இருக்கும். கயத்தாறு அருகே சிவஞானபுரம், புதூர் பகுதிகளில் பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சி என்பது குறைவாக உள்ளது. ரொம்ப சிறிய குழந்தைகளாக உள்ளனர். அந்த குழந்தைகள் முழு உடல் மற்றும் அறிவு திறனோடு எதிர்காலத்தில் வளராமல், சத்தற்ற குழந்தைகளாக பிறப்பதற்கு காரணம், சிறு வயதில் முழு உடல் தகுதி பெறாத தாய்மார்கள் குழந்தைகளை பெற்றெடுப்பது தான். 

எனவே, திருமணம் என்ற பேச்சே 21 வயது வரை எடுக்கவே கூடாது. கல்லூரி என்பது மாபெரும் புதிய வாசல்களை திறந்துவிடும். அதன் மூலம் புதிய பல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்கால வளர்ச்சிக்கு எப்படி திட்டமிடுவது. மற்றவர்களுடன் எப்படி பழகுவது, பேசுவது போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். இந்த வாய்ப்பு பள்ளிகளில் கிடைக்காது. அங்கு அனைவரும் குழந்தைகள் தான். இதுபோன்ற வாய்ப்புகள் கல்லூரிகளில் தான் கிடைக்கும். கல்லூரிகளில் பேராசிரியர்கள் உங்களது சந்தேகங்களுக்கு பதில் அளிப்பார்கள். கல்லூரி வாழ்க்கை தான் மாணவ மாணவிகளின் உண்மையான எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடம். கல்லூரி வாழ்க்கையை இழந்தால், எதிர்கால வாய்ப்பை பெரியளவுக்கு இழக்க போகிறீர்கள் என்று அர்த்தம்.
 
வேலை வாய்ப்புக்கு செல்ல வேண்டுமென்றால் கண்டிப்பாக கல்லூரி படிப்பு படிக்க வேண்டும். 12-ம் வகுப்பு முடித்து வேலை சென்று பெரியளவுக்கு வர முடியும் என்று எண்ண வேண்டாம். மாணவ மாணவிகளை இன்னும் 3 ஆண்டுகளுக்கு உயர்கல்வி படிக்க விட்டுவிடுங்கள். அப்போது தான்  தங்கள் சொந்த காலில் நிற்பதற்கு தயாராவார்கள். திருமண ஏற்பாடுகள் செய்திருந்தால் அதனை தயவு செய்து கைவிட்டுவிட வேண்டும். திருமணம் என்பது படிப்பிற்கு தடையல்ல. திருமணம் செய்த பின்னர் ஏராளமானோர் படித்து பெரிய அளவுக்கு வந்துள்ளனர்.

புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டங்களில் மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000-ம் அரசு வழங்குகிறது. உங்களுக்கு என்ன பொருளாதார சிக்கல் இருந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நாங்களே கல்லூரி கட்டணத்தை செலுத்தி படிக்க வைத்து வருகிறோம். எனவே, மாணவ மாணவிகள் உயர்கல்வி படிப்புக்கு வர வேண்டும். அனைவரும் அரசு கல்லூரிகளையே தேர்வு செய்து படியுங்கள். தொடர்ந்து, பல்வேறு கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்கள், துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு படிப்புகள் குறித்தும், மாணவ - மாணவிகளுக்கு துறைகள் சார்ந்த படிப்புகளும், அதில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,  அவாகள் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி உதவி ஆட்சியர் (கோவில்பட்டி) ஹீமான்ஷீ மங்கள்,   உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ்ராம்,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) து.சிதம்பரநாதன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரவீந்திரன், மரியஜான் பிரிட்டோ, பள்ளிக்கல்வித்துறை உதவி திட்ட அலுவலர் முனியசாமி, பள்ளிக்கல்வித்துறை ஆய்வாளர் ரமேஷ், இத்திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ச.சத்தியசீலன், சுடலைமுத்து, ஒருங்கிணைப்பாளர்கள் ஜான்சன், சுடலைமணி, மேடையாண்டி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory