» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:08:04 PM (IST)

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் பிரிந்து அனைவரையும் மீண்டும் இணைத்தால் மட்டுமே பிரசாரத்தில் பங்கேற்பேன் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். 

இந்த நிலையில், தேனி மாவட்டம் போடியில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் முதல்வரும், போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிகையில், "சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக போடியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து வருகிறார். அதிமுகவை வளர்ப்பதற்காக பாடுபட்டவர் செங்கோட்டையன்.

அதிமுகவில் சூறாவளி, சுனாமிகள் வந்தபோதும் இந்த இயக்கத்தில் நிலையாக நின்று அதிமுகவை வளர்ப்பதற்காக அனைத்து மக்களையும் அரவணைத்து சென்றவர் செங்கோட்டையன். அவர் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும், ஒருங்கிணைத்தால்தான் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டுவர முடியும் என்று தனது மனதின் குரலாக ஒலித்து வருகிறார். அவருடையை எண்ணம், மனசாட்சி நிறைவேறுவதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நோக்கத்திற்காகத்தான் நாங்களும் போராடி வருகிறோம். அதிமுக சக்திகள் பிரிந்திருந்தால் வெற்றி பெற முடியாத என் சூழலில் உள்ளோம். இந்த இயக்கம் தொண்டர்களுக்கான இயக்கம். இந்த இயக்கத்திலிருந்து தொண்டர்களை யாரும் வெளியேற்ற முடியாது. எடப்பாடி பழனிசாமி எதற்காக சுற்றுப் பயணம் செய்கிறார் என்பது தெரியாது. அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைந்தால்தான் அதிமுக வெற்றி பெறும் என்ற எண்ணத்தில் தனது கருத்துக்களையும் பங்களிப்பையும் செங்கோட்டையன் வழங்கி வருகிறார்.

அவரது கருத்துக்களின் முழுவடிவமே அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதுதான். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என யார் சொன்னாலும் அவர்களுக்கு உறுதுணையாக முழு ஒத்துழைப்பு வழங்குவோம். பக்கபலமாக இருப்போம்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory