» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போலீசாரை கொல்ல முயன்ற வழக்கு: தென்காசி ஹனீபாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை!

புதன் 29, அக்டோபர் 2025 10:40:34 AM (IST)



அத்வானி பைப் வெடிகுண்டு வழக்கில் தேடியபோது போலீசாரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தென்காசி ஹனீபாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பா.ஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கடந்த 2011-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ரத யாத்திரை சென்றார். அப்போது மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி பாலத்தின் அடியில் பைப் வெடிகுண்டு வைத்து அவரை கொல்ல முயற்சி நடந்தது. இதுதொடர்பாக முகமது ஹனீபா என்ற தென்காசி ஹனீபா உள்ளிட்டோர் மீது திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட தென்காசி ஹனீபா வத்தலக்குண்டு அருகே பதுங்கி இருந்தபோது அவரை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயன்றதாக வத்தலக்குண்டு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டு, தென்காசி ஹனீபாவை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து கோவை சி.பி.சி.ஐ.டி.-எஸ்.ஐ.டி. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் தென்காசி ஹனீபா குற்றவாளி என அறிவித்து அவரை ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தென்காசி ஹனீபா நீதிபதிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், உங்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த வழக்கில் உங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். எனவே உங்களை அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்து உள்ளோம். உங்களுக்கு தண்டனை வழங்குவது பற்றி என்ன சொல்கிறீர்கள் என கேட்டனர்.

அதற்கு ஹனீபா, என் மீது பொய் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 4½ ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தேன். நான் நிரபராதி என்றார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தென்காசி ஹனீபா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. 

ஏற்கனவே சிறையில் இருந்த நாட்களை கழித்து மீதி தண்டனையை அனுபவிக்க அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி அவரை போலீசார் பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்துச்சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory