» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காதலிக்க மறுத்ததால் மாணவி கொலை : கைதான வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

வியாழன் 20, நவம்பர் 2025 10:52:17 AM (IST)

ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்ததால் மாணவியை குத்திக் கொலை செய்த வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன்-கவிதா தம்பதியின் மூத்த மகள் ஷாலினி ராமேஸ்வரம் அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார். அவரை ஒருதலையாக காதலித்து வந்த அதே பகுதியை சேர்ந்த முனியராஜ் என்பவர் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த ஷாலினியை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

மாணவி கொலையை கண்டித்தும், கொலையாளி முனியராஜை தங்களிடம் ஒப்படைக்க கோரியும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ராமநாதபுரம் போலீஸ் அதிகாரிகள் மற்றும் ராமேஸ்வரம் நகர்மன்ற தலைவர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கைதான கொலையாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு இரவு வரை மருத்துவமனைக்குள் முற்றுகையில் ஈடுபட்டனர். போலீசார் பிரேத பரிசோதனை முடிந்ததும் உடலை ஒப்படைக்க உறவினர்களிடம் கேட்ட பொழுது வாங்க மறுத்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சிவகாமி நகர் நவீன தகன மேடையில் வைத்து சடங்குகள் செய்து தகனம் செய்தனர். பல்வேறு கனவுகளுடன் காலை பள்ளிக்குச் சென்ற மாணவி கொலையுண்ட சம்பவம் ராமேஸ்வரத்தை சோகத்தில் ஆழ்த்தியது.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட முனியராஜிடம் ராமேஸ்வரம் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து கொலையாளி முனியராஜூக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ராமேஸ்வரம் கோர்ட்டில் இரவில் நீதிபதி முன்பு முனிராஜ் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, கைதான முனியராஜை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் அவரை அழைத்துச் சென்ற போலீசார் ராமநாதபுரம் சிறையில் நள்ளிரவில் அடைத்தனர். முன்னதாக நேற்று கொலை நடந்தது முதல் இரவு வரை கொலையாளியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாணவியின் உறவினர்கள் வலியுறுத்திக் கொண்டே இருந்தனர்.

இதனால் இரவில் முனியராஜை கோர்ட்டுக்கு அழைத்து செல்லும்போதிலும், நள்ளிரவில் சிறையில் அடைக்க அழைத்து சென்ற போதிலும் திடீரென்று வழி மறித்து தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவியதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த கொலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்துவரும் நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இறந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வைத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory