» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுபோதை தகராறுகளில் அடுத்தடுத்து பயங்கரம்: 3 பேர் கொலை; இருவர் கைது!

செவ்வாய் 30, ஜூன் 2026 12:40:11 PM (IST)

நாகர்கோவில் அருகே இருவேறு இடங்களில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவங்கள் குறித்து ஈத்தாமொழி மற்றும் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ஈத்தாமொழி அருகே உள்ள புதூர் கண்ணம்பிவிளையைச் சேர்ந்தவர் சிங்கம் (60), தென்னை நார் ஏற்றும் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் லிங்கசாமி (49), கட்டிடத் தொழிலாளி. இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள காலியிடத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

மறுநாள் திங்கள்கிழமை காலை, லிங்கசாமி முகம் மற்றும் உடல் பகுதிகளில் கல்லால் தாக்கப்பட்ட காயங்களுடனும், சிங்கம் தலையில் காயம் மற்றும் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையிலும் கொலையுண்டு கிடந்தனர். தகவல் அறிந்து வந்த தற்காலிக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திவ்யா, கன்னியாகுமரி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் ஈத்தாமொழி போலீசார் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (32) என்பவரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு கொலை!

நாகர்கோவில் அருகே உள்ள புதுகிராமத்தில் தனியார் பள்ளி கட்டுமானப் பணியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சரவணகுமார் (35) மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தங்கபாண்டி (40) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு பள்ளி வளாகத்தில் அமர்ந்து இருவரும் மது அருந்தியபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த தங்கபாண்டி, சரவணகுமாரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இச்சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள தங்கபாண்டியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory