» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் தொடர்வார்: வைகோ நம்பிக்கை - திமுக மீது கடும் விமர்சனம்!

செவ்வாய் 30, ஜூன் 2026 3:47:32 PM (IST)



வரவிருக்கும் ஐந்து ஆண்டுகள் மட்டுமன்றி, அதற்குப் பிறகும் தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் தொடர்வார் என்று வைகோ தெரிவித்தார். 

தமிழக வெற்றிக் கழகத்துடனான  கூட்டணியில் மதிமுக உறுதியாக உள்ளதாகப் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "தவெக கூட்டணியின் ஓர் அங்கமாக மதிமுக தொடர்ந்து செயல்படும். வரவிருக்கும் ஐந்து ஆண்டுகள் மட்டுமன்றி, அதற்குப் பிறகும் தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் தொடர்வார் என்ற நம்பிக்கை உள்ளது" எனக் குறிப்பிட்டார். 

தொடர்ந்து முந்தைய திமுக ஆட்சி குறித்துப் பேசிய அவர், கடந்த திமுக ஆட்சியில் நிர்வாக ரீதியான முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் இருந்ததாகவும், அப்போது கூட்டணியில் இருந்த காரணத்தால் அது குறித்து வெளியே பேசவில்லை என்றும் தெரிவித்தார். கூட்டணியில் நீடித்துக் கொண்டே அரசை பொதுவெளியில் விமர்சிப்பது அரசியல் நாகரிகமாக இருக்காது என்பதால் அப்போது அமைதி காத்ததாக அவர் விளக்கம் அளித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, திமுக கூட்டணியில் இருந்தபோது இந்த விமர்சனங்களை ஏன் முன்வைக்கவில்லை என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இக்கேள்வியால் வைகோவிற்கும் அந்தச் செய்தியாளருக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த மதிமுக நிர்வாகிகளும் செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், செய்தியாளர் சந்திப்பு நடைபெற்ற பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory