» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உள்ளாட்சித்தேர்தல் பிரச்சாரத்தை உடனடியாக தொடங்க வேண்டும்: திமுகவினருக்கு கீதா ஜீவன் வலியுறுத்தல்!
திங்கள் 27, ஜூலை 2026 8:10:32 AM (IST)

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற தி.மு.க.வினர் உடனடியாக வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும் என்று தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் கேட்டுக்கொண்டார்.
கோவில்பட்டி மேற்கு நகர தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. நகரச் செயலாளர் கருணாநிதி எம்.எல்.ஏ. கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்புரையாற்றிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது: "நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற திமுகவினர் இப்போதே பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்துப் பொதுமக்கள் மத்தியில் விரிவாக எடுத்துரைக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே மக்களுக்குரிய வளர்ச்சிப் பணிகளைத் தடையின்றிச் செய்ய முடியும். எனவே, வீடு வீடாகச் சென்று தி.மு.க.வின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்." என்று தெரிவித்தார்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கீதா ஜீவன் தெரிவித்ததாவது: "தவெக அரசு பொறுப்பேற்று 2½ மாதங்களில் ரூ.20,851 கோடி கடன் வாங்கியுள்ளது. ஆனால், தனது பிரச்சாரத்திலும் ஆட்சிக்கு வந்த பின்னரும் தமிழக மக்கள் மீது கடன் சுமையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றிவிட்டார் என்று விஜய் பேசினார். தற்போது கடன் வாங்கியது அவருக்குத் தெரியுமா என்பதை அவரது முடிவுக்கே விட்டுவிடுகிறோம்.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லியிலும் தமிழகத்திலும் போராட்டங்கள் நடந்தன. ஆனால், தமிழகத்தில் ஆளும் தவெகவினர் திரையரங்குகளில் அமர்ந்துகொண்டு ரீல்ஸ் பதிவிட்டனர். இது கலாச்சார சீரழிவு; இதுதானா அவர்கள் கூறிய மாற்றம்? விஜய் கூறியது எதையும் செய்யவில்லை.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றிய மனோன்மணீயம் சுந்தரனார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர், 'முதலில் தேசிய கீதம், அடுத்து வந்தே மாதரம், 3-வதாகத்தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவோம்' என்கிறார். எங்கள் தலைவர் ஆட்சியின்போது துணைவேந்தர் இப்படிப் பேட்டி கொடுக்க முடியுமா? மொழியைக் காப்பாற்ற இந்த அரசு என்ன செய்யப்போகிறது?" என்றார்.
இக்கூட்டத்தில் கயத்தாறு யூனியன் முன்னாள் தலைவர் மாணிக்கராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் பீட்டர், ராமர், ஒன்றியச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், கருப்பசாமி, ஜெயக்கண்ணன், மொழிப்போர் தியாகி முத்து, நகர்மன்ற உறுப்பினர் தவமணி, சிறுபான்மையினர் அணி மாவட்டத் துணைத் தலைவர் அமலி பிரகாஷ், தொழில்நுட்ப அணி தொகுதிப் பொறுப்பாளர் மகேந்திரன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பரமசிவன் உள்ளிட்ட பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு!
திங்கள் 27, ஜூலை 2026 12:06:56 PM (IST)

தமிழகத்தில் 2வது முறையாக தனியார் பால், தயிர் விலை உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!
திங்கள் 27, ஜூலை 2026 11:20:18 AM (IST)

பதிவை புதுப்பிக்காத ‘எம்-சாண்ட்’ ஆலைகள் மீது நடவடிக்கை: தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை!
திங்கள் 27, ஜூலை 2026 10:37:14 AM (IST)

கடலில் மூழ்கிய 2 மாணவர்கள் சடலமாக மீட்பு: சோகத்தில் மூழ்கிய தருவைகுளம் கிராமம்!
திங்கள் 27, ஜூலை 2026 10:11:53 AM (IST)

இடுக்கு பிள்ளையார் கோவிலில் மேலும் ஒருவர் சிக்கியதால் பரபரப்பு: பெண் பக்தர் பத்திரமாக மீட்பு!
திங்கள் 27, ஜூலை 2026 8:37:02 AM (IST)

சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு ஆலை விபத்து: உயிரிழப்பு 4 ஆக உயர்வு - 11 பேர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 8:57:56 PM (IST)


