» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பதிவை புதுப்பிக்காத ‘எம்-சாண்ட்’ ஆலைகள் மீது நடவடிக்கை: தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை!

திங்கள் 27, ஜூலை 2026 10:37:14 AM (IST)

AssemblyTn.jpg

தமிழகத்தில் பொதுப்பணித்துறையில் பதிவைப் புதுப்பிக்காமல் இயங்கி வரும் 200-க்கும் மேற்பட்ட ‘எம்-சாண்ட்’ ஆலைகள் மீது விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமவளத்துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கனிமவளத் துறையில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டுபிடிப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அத்துறைக்கான அமைச்சர் பிரபு பல்வேறு மாவட்டங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு, விதிகளை மீறிச் செயல்படும் குவாரிகளுக்குச் ‘சீல்’ வைக்க உத்தரவிட்டு வருகிறார். அத்துடன் முறைகேடுகளுக்குக் காரணமான கனிமவளத்துறை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, முறைகேடுகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் காரணமாக எம்-சாண்ட் உற்பத்தியாளர்கள் இதன் விலையை உயர்த்தினர். இதுதொடர்பாக உற்பத்தியாளர் சங்கங்களை அழைத்து அமைச்சர் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, விலை உயர்வு திரும்பப் பெறப்பட்டது.

40% ஆலைகள் பதிவைப் புதுப்பிக்கவில்லை:

எம்-சாண்ட் நிறுவனங்களின் விதிமீறல்கள் குறித்துக் கனிமவளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: "தமிழகத்தில் ஆற்று மணலுக்கு மாற்றாகக் கருங்கல் துகள்களைச் சுத்தப்படுத்தி எம்-சாண்ட் தயாரிக்கப்படுகிறது. கட்டுமானப் பணிகளுக்கு இதைப் பயன்படுத்த அரசு பரிந்துரைத்துள்ளது. இத்தகைய ஆலைகள் பொதுப்பணித்துறையில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்தப் பதிவை 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.

தற்போது தமிழகத்தில் 506 எம்-சாண்ட் ஆலைகள் பதிவு செய்து செயல்பட்டு வருகின்றன. இவற்றின் தரவுகளை ஆய்வு செய்ததில், சுமார் 40 சதவீதம் அதாவது 200 ஆலைகள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதிவைப் புதுப்பிக்காமல் இயங்கி வருவது தெரியவந்துள்ளது.

பதிவைப் புதுப்பிக்காத ஆலைகள் விற்பனை செய்யும் எம்-சாண்டின் தரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இத்தகைய நிறுவனங்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது." கனிமவளத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் இ விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், விதிகளின்படி பதிவைப் புதுப்பிக்காமல் சட்டவிரோதமாக உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் எம்-சாண்ட் நிறுவனங்கள் மீது விரைவில் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory