» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாளை சிறையில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!

திங்கள் 27, ஜூலை 2026 3:41:27 PM (IST)

UdhayanithiPalaiJail.jpg

கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவதூறாகவும் பேசியதாகக் கூறி, கடந்த 21-ஆம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அவரது பிணை (ஜாமீன்) மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் பாளையங்கோட்டை சிறைக்கு நேரில் சென்ற உதயநிதி ஸ்டாலின், அங்கு அடைக்கப்பட்டுள்ள மார்க்கண்டேயனைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது திமுக முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளப் பதிவு:

சந்திப்பிற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: "பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மார்க்கண்டேயனை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று சந்தித்தோம்.

சிறையில் இருந்தாலும் முன்பை விட இன்னும் வேகமாக கழகப்பணி மற்றும் மக்கள் பணியாற்றிடும் உத்வேகத்துடன் உள்ள அண்ணன் மார்க்கண்டேயனிடம் நலம் விசாரித்தோம். அவரின் விடுதலைக்காகக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, கழக வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம்.

மிசா மற்றும் எமர்ஜென்சியைப் பார்த்த இயக்கம் திமுக. தத்தித்தாவி ஆட்சிக்கு வந்து தறிகெட்டு அரசு நடத்தும் அரசின் கைது நடவடிக்கைகளுக்கெல்லாம் கழகத்தின் கடைக்கோடி தொண்டன் கூட அஞ்சமாட்டான். விமர்சனத்திற்காகச் செய்யப்படும் ஒவ்வொரு கைதின்போதும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி." எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory