» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு!

திங்கள் 27, ஜூலை 2026 5:54:38 PM (IST)

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு அரசு வழங்கிய அரசுப் பணி நியமன ஆணைகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2025 செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட நிலையில், தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து கடந்த ஜூலை 10-ஆம் தேதி உயிரிழந்த 31 பேரின் வாரிசுதார்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார்.

கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கியதை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

வழக்கு விசாரணையின் போது, காவல்துறையின் தவறால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், சாதாரண அரசுப் பணியே வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் வாதாடப்பட்டது.

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் தெரிவித்ததாவது:     "திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கிப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவலாம். அரசுத் தரப்பில் சாதாரண பணி வழங்கப்படுவதாகக் கூறுவதை ஏற்க முடியாது. எந்தப் பணியும் சாதாரண பணி அல்ல; ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உதவும் பணியே.

அரசுப் பேருந்து விபத்துகள் மற்றும் பட்டாசு ஆலை விபத்துகளில் நாள்தோறும் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க முடியுமா?" என அரசுத் தரப்பிற்குச் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், தமிழ்நாடு முதல்வரால் வழங்கப்பட்ட அரசுப் பணிக்கான ஆணைகளை ரத்து செய்து உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory