» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆண்டர்சன் ஓய்வு

சனி 13, ஜூலை 2024 11:10:14 AM (IST)



இங்கிலாந்தின் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து வெற்றியுடன் விடை பெற்றார்.

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 41. லங்காஷயரின் பர்ன்லி நகரில் பிறந்த இவர், மெல்போர்னில் 2002ல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன்பின் 2003ல் லார்ட்ஸ் டெஸ்ட் (எதிர்: ஜிம்பாப்வே), 2007ல் சர்வதேச 'டி-20'யில் (எதிர்: ஆஸி., இடம்: சிட்னி) முதன்முறையாக பங்கேற்றார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தெரிவித்திருந்தார் ஆண்டர்சன். இப்போட்டியில் (2024, ஜூலை 10-12) இரு இன்னிங்சிலும் சேர்த்து 4 விக்கெட் கைப்பற்றினார். இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து வெற்றியுடன் விடை பெற்றார் ஆண்டர்சன்.

சர்வதேச அரங்கில் 188 டெஸ்ட் (704 விக்கெட்), 194 ஒருநாள் (269), 19 'டி-20' (18) போட்டியில் விளையாடிய ஆண்டர்சன், 298 முதல்தரம் (1126 விக்கெட்), 261 'லிஸ்ட் ஏ' (358) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2010ல் 'டி-20' உலக கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த ஆண்டர்சன், சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இரு முறை (2004, 2013) பங்கேற்றார்.

இதுகுறித்து ஆண்டர்சன் கூறுகையில், ''இங்கிலாந்துக்காக விளையாடியது மகிழ்ச்சி. உலகின் தலைசிறந்த வீரர்களுடனும் விளையாடும் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். தவிர எனது வாழ்க்கைக்காக சில நல்ல நண்பர்களை உருவாக்கினேன். இளம் வீரர்கள், ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்க வேண்டும். ஏனெனில் இது ஒரு சிறந்த பயணம்,'' என்றார்.

இங்கிலாந்தின் ஆண்டர்சன், டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். இவர் 188 டெஸ்டில், 704 விக்கெட் சாய்த்துள்ளார். தவிர இவர், அதிக விக்கெட் சாய்த்த வேகப்பந்துவீச்சாளர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் அரங்கில் 40 ஆயிரம் பந்துகளுக்கு மேல் வீசிய முதல் வேகப்பந்துவீச்சாளரானார் இங்கிலாந்தின் ஆண்டர்சன். இவர், 40037 பந்துகள் (6672 ஓவர்) வீசினார். அடுத்த இடத்தில் சகவீரர் ஸ்டூவர்ட் பிராட் (33698 பந்து) உள்ளார்.

அதிக பந்துவீசிய ஒட்டுமொத்த டெஸ்ட் பவுலர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார் ஆண்டர்சன். முதல் மூன்று இடங்களில் 'சுழல்' வீரர்களான இலங்கையின் முரளிதரன் (44039 பந்து), இந்தியாவின் கும்ளே (40850), ஆஸ்திரேலியாவின் வார்ன் (40705) உள்ளனர்.

டெஸ்ட் அரங்கில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறினார் ஆண்டர்சன். இதுவரை 23 டெஸ்டில், 91 விக்கெட் சாய்த்தார். இந்திய ஜாம்பவான் கபில்தேவ் (89 விக்கெட், 25 டெஸ்ட்) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் மெக்ராத் (110 விக்கெட், 23 டெஸ்ட்) உள்ளார். டெஸ்ட் அரங்கில் அதிக டெஸ்டில் பங்கேற்ற வீரர்கள் வரிசையில் 2வது இடத்தில் நீடிக்கிறார் ஆண்டர்சன் (188). முதலிடத்தில் சச்சின் (200 டெஸ்ட்) உள்ளார்.

சச்சின் வாழ்த்து : இந்திய ஜாம்பவான் சச்சின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ''ஹாய் ஜிம்மி, நம்பமுடியாத 22 ஆண்டு கால பந்துவீச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்து விட்டீர்கள். வேகம், துல்லியம், ஸ்விங், உடற்தகுதியுடன் நீங்கள் பந்துவீசுவதை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கும். உங்களது செயல்பாடு அடுத்த தலைமுறையினருக்கு ஊக்கமாக அமையும். இனிவரும் நாட்களில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகவும், நலமுடனும் வாழ வாழ்த்துகிறேன்,'' என தெரிவித்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory