» சினிமா » செய்திகள்

பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!

வெள்ளி 10, ஜனவரி 2025 10:25:14 AM (IST)

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 80.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவரது உயிர் பிரிந்தது. கடந்த 1944, மார்ச் 3-ம் தேதி எர்ணாகுளத்தில் அவர் பிறந்தார். அவரது தந்தையை பின்பற்றி இசை பயின்று, அதில் தேர்ச்சி பெற்றார். விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்ற அவர், சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடியதன் மூலம் திரைப்படத்துக்கு பாடும் வாய்ப்பை பெற்றார்.

தமிழில் கடந்த 1973 முதல் திரைப்படங்களுக்கு பாடல் பாடி உள்ளார். எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, எஸ்.ஏ.ராஜ்குமார், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், பரணி, ஸ்ரீகாந்த் தேவா, ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட இசை அமைப்பாளர்களுடன் தமிழில் பணியாற்றி உள்ளார்.

‘மூன்று முடிச்சு’ படத்தில் ‘வசந்த கால நதிகளிலே’, ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ‘வாழ்க்கையே வேஷம்’, அந்த 7 நாட்களில் ‘கவிதை அரங்கேறும் நேரம்’, நானே ராஜா நானே மந்திரி படத்தில் ‘மயங்கினேன் சொல்ல தயங்கினேன்’, வைதேகி காத்திருந்தாள் படத்தில் ‘ராசாத்தி உன்ன’, கிழக்கு சீமையிலே படத்தில் ‘கத்தாழங் காட்டு வழி’, மே மாதம் படத்தில் ‘என் மேல் விழுந்த’, பூவே உனக்காக படத்தில் ‘சொல்லாமலே யார் பார்த்தது’, கிரீடம் படத்தில் ‘கனவெல்லாம்’ உள்ளிட்ட பாடல்களை அவர் தமிழில் பாடி உள்ளார். சுமார் 60 ஆண்டுகள் இசை உலகை ஆட்சி செய்த அவர் தற்போது விடைபெற்றுள்ளார். 

பி.ஜெயச்சந்திரனின் திரைப் பயணம்: (2020-ல் பி.ஜி.எஸ்.மணியன் எழுதிய கட்டுரையில் இருந்து...) எழுபதுகளின் தொடக்கத்தில் தமிழ்த் திரை இசையில் சத்தமே இல்லாமல் ஒரு மாறுதல் நிகழ ஆரம்பித்தது. அறுபதுகளின் இறுதிவரை கனமான குரல் வளம் கொண்ட பாடகர்களை முன்னிலைப்படுத்தி இயங்கி வந்த திரையிசை, எழுபதுகளில் புதிய தலைமுறை நடிகர்களான கமல், ரஜினி போன்றவர்களின் வருகையால் மென்மையான குரல்வளம் நிறைந்த பாடகர்களின் வசம் வந்தது.

இளைய தலைமுறையின் துள்ளல், துடிப்பு, உற்சாகத்தைப் பிரதிபலிக்க ஒரு எஸ்.பி.பி. கிடைத்தார். அமைதியான நதியோட்டமாக மனத்தை வருட ஒரு ஜேசுதாஸ் கண்டெடுக்கப்பட்டார். இந்த இருவரின் ஆளுமை திரையிசையை வசப்படுத்திக்கொண்ட நேரத்தில், மலையாளத் தேசத்திலிருந்து மற்றுமொரு மயக்கும் குரலால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப்போட வந்தவர்தான் பளியத்து ஜெயச்சந்திரக்குட்டன் என்ற பி. ஜெயச்சந்திரன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory